விஜய்யின் சொந்த துறையிலேயே கிரைம்.. தவெக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லையா? SI எரித்துக் கொலை

  • சென்னை: சென்னை மாநகரின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அவரது சொந்த வீட்டிலேயே பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே தலைநகரில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறதா என்ற கடுமையான கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இக்கொலை சம்பவம் காவல்துறை மற்றும் உள்துறையின் நிர்வாகச் செயல்பாடுகள் மீதான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

    Advertisement

    சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி: லேக் ஏரியாவில் நடந்த கொடூரம்

    சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜி (வயது 58). இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று, இவர் தனது வீட்டில் பலத்த தீக்காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் வீட்டில் ஏற்பட்ட விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

    Advertisement

    மனைவியின் முன்னுக்குப் பின் முரணான பதில்களும் உண்மையும்

    சம்பவம் குறித்து ராஜியின் மனைவி செல்வராணியிடம் (58) போலீசார் விரிவான வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் அளித்த தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்த விதம், தீ பரவிய முறை மற்றும் சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த நபர்கள் குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    தொடர் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கணவர் ராஜியைத் தானே திட்டமிட்டு தீ வைத்துக் கொன்றதை செல்வராணி ஒப்புக்கொண்டார். தனக்குத் தெரிந்த ஆண் நண்பரான தேவா என்பவருடன் சேர்ந்து, தூங்கிக்கொண்டிருந்த ராஜி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வராணியை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி தேவாவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    கொலைக்கான காரணம் என்ன? போக்சோ வழக்கு பின்னணி

    கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜி மீது ஏற்கனவே கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    இதனால் குடும்பத்தில் தொடர்ந்து கடும் வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன. கணவனின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமா, போக்சோ வழக்கினால் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமா, அல்லது செல்வராணிக்கும் தேவாவுக்கும் இடையேயான தொடர்பு இதற்குப் பின்னணியில் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    சொந்தத் துறையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத நிலையா? - எழும் கேள்விகள்

    ஒரு காவல் உதவி ஆய்வாளர் மீதே போக்சோ வழக்கு பதியப்படும் நிலையும், அதே அதிகாரி தனது வீட்டிலேயே மிகக் கொடூரமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் நிலையும் காவல்துறையின் உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் பலவீனத்தைக் காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    காவல்துறையைத் தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய், பொது அமைதியை நிலைநாட்டவும் குற்றங்களைத் தடுக்கவும் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கத் தொடங்கியுள்ளன. "காவல்துறை சீருடையில் உள்ளவர்களுக்கே இந்த கதி என்றால், சாமானிய மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் யார் பாதுகாப்பு தருவது?" என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

    Advertisement

    சமீபகாலமாக தொடர்ச்சியாக அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்கள், பழைய குற்றவாளிகளின் சுதந்திரமான நடமாட்டம், போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தலைநகரின் மையப்பகுதியில் ஒரு போலீஸ் அதிகாரியே கொல்லப்பட்டிருப்பது அரசுக்கு மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

    குற்றச் சம்பவங்கள் நடந்த பிறகு வழக்குப் பதிந்து கைது செய்வதோடு கடமை முடிந்துவிடுவதில்லை; குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் உளவுத்துறை பலப்படுத்தப்பட வேண்டும் மற்றும் காவல்துறையில் உள்ள அதிகாரிகளின் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய சூழல் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது.

    English Summary

    Chennai Armed Reserve SI Burnt Alive by Wife & Friend; CM Vijay Faces Flak Over Law & Order