சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 33 புறநகர் ரயில்கள் காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 33 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் 41 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பராமரிப்பு பணிகளின் நேரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து ரயில்வே சென்னை கோட்டம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் எட்டு மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும், இதனால் மீதமுள்ள 33 புறநகர் மின்சார ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தாம்பரம் - செங்கல்பட்டு, தாம்பரம் - அரக்கோணம், தாம்பரம் - திருமால்பூர், செங்கல்பட்டு - காஞ்சிபுரம், திருமால்பூர் - தாம்பரம் ஆகிய சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இன்று காலை 11 மணி முதல் ஆயிரக்கணக்கான பயணிகள் தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இதனால் பேருந்து நிலையங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிறப்பு பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் அதிகப்படியாக உள்ள காரணத்தால், முண்டியடித்துக்கொண்டு ரயிலில் ஏறும் நிலை உள்ளது. இதன் காரணமாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களை சுற்றிய முக்கிய சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், முக்கிய வழித்தடங்களில் கூடுதலாக மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரயில்கள் ரத்து குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.