ஸ்தம்பிக்கும் வடசென்னை.. பஸ் ஓட்டுநரை ஆட்டோ டிரைவர் தாக்கியதால்.. 50+ ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்!

  • சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலையில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சக பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் பேருந்துகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னையை பொறுத்தவரை மாநாகர பேருந்துகள் தான் பொது போக்குவரத்திற்கு முக்கியமானது. குறைந்த டிக்கெட் விலையில் நகரில் எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம் என்பதால் பொது போக்குவரத்தின் உயிர்நாடியாக சென்னை மாநகர பேருந்துகள் உள்ளன. அதில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் நகரமே ஸ்தம்பித்துவிடும் என சொல்லலாம்.

    Advertisement

    என்ன நடந்தது

    மாதாந்தம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பொன்னேரியில் இருந்து செல்லும் 56பி வழித்தட பேருந்தை ஓட்டி வந்ததாக தெரிகிறது. புதுவண்ணாரப்பேட்டை அருகே பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்தை இயக்கியபோது, எதிர்த்திசையில் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. இதையடுத்து ஆட்டோவை ஓரமாக நிறுத்துமாறு ராஜேந்திரன் கூறியதாக தெரிகிறது.

    தாக்குதல்

    அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆட்டோ ஓட்டுநர், கல்லால் ராஜேந்திரனை தாக்கியதாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    போராட்டம்

    சக ஓட்டுநர் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அப்பகுதியில் வந்த மாநகர பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்தனர். சக ஓட்டுநர் தாக்கப்பட்டதை கண்டித்து, அந்த வழியாகச் சென்ற சுமார் 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளின் ஓட்டுநர்கள் பேருந்துகளை சாலையிலேயே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடுமையான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, காயமடைந்த ராஜேந்திரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பேருந்து ஓட்டுநர்கள் வலியுறுத்தினர். அப்போது ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    டிராபிக் பாதிப்பு

    பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சுமார் 5 கிமீ தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் நேரம் ஆக ஆக டிராபிக் பாதிப்பு மேலும் மோசமாகவே மாறியது. இதையடுத்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் உயர் அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்து, பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழலே காணப்படுகிறது.

    English Summary

    An MTC bus driver was allegedly attacked by an auto driver in Pudhuvannarapettai(வண்ணாரப்பேட்டை பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்): Chennai Bus Drivers Protest latest news in tamil.