போதிய பேருந்துகள் இல்லை.. மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் மக்கள்! தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன?

  • சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை இருக்கும் நிலையில், கடந்த இரு நாட்களாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் பல இடங்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதற்கிடையே போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து மேற்கூரையில் அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்லி வீடியோ ஒன்று பரவி வருகிறது இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்பினர்.. வெள்ளிக்கிழமை முதலே சென்னைவாசிகள் சாரை சாரையாக சொந்த ஊருக்கு திரும்பினர். மதியமே மக்கள் கிளம்பிய நிலையில், மாலை நேரம் செல்ல செல்ல சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

    Advertisement

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

    இரவு 9 மணியளவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என இரு நாட்களுமே இதே நிலைமை தான். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறையவில்லை. முன்பதிவு செய்த பேருந்துகள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாத பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், அடுத்து பேருந்து எப்போது புறப்படும் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    Advertisement

    வாக்குவாதம்

    கடந்த முறை இதேபோல தொடர் விடுமுறை வந்தபோது, போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரில் சென்று கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவரை பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அது அப்போதே டிரெண்டானது. ஆனால், இந்த முறை அமைச்சர் நேரில் வராத நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அவர்களிடமும் பயணிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக போதிய பேருந்துகள் இல்லை என்றும் பேருந்துகள் எப்போது புறப்படும் என்றே தெரியவில்லை என்றும் பயணிகள் கேள்வி எழுப்பினர்.

    வீடியோ

    இந்த நிலையில், இன்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவியது.. அதில் பயணிகள் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சிலர் பேருந்துக்குள் இடம் கிடைக்காமல் மேலே ஏறி அமர்ந்து பயணிப்பது போன்றும் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "உத்தரப் பிரதேசம், பீகார், வங்கதேசம் என்று நினைக்க வேண்டாம்.. இது தமிழ்நாடு தான். நல்ல மாற்றம்" என சாடியுள்ளார்.

    Advertisement

    விளக்கம்

    இந்த வீடியோ டிரெண்டான நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் விளக்கமளித்துள்ளது. அதாவது இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் இல்லை.. கர்நாடகாவில் நடந்தது என தெரிவித்துள்ளது.

    இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "இது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அளித்துள்ள விளக்கத்தில், "குறிப்பிட்ட காணொலியில் இடம்பெற்றுள்ள KA 07 C 4297 என்ற பேருந்து, கர்நாடகா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம். கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வழியாக புதுச்சேரி வரை இயக்கும்படியான Interstate அனுமதி சீட்டு பெற்ற வாகனம். காணொலியில் உள்ள சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. பெங்களூருவில் உள்ள அத்திபள்ளி / அஸ்கூர் கேட் பகுதியில் நடந்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Video showing passengers travelling on the roof of a bus was linked to the rush from Chennai during the Vinayagar Chaturthi holiday(பேருந்தில் நிரம்பி வழியும் கூட்டம்): Chennai Bus Roof Video latest news in tamil.