அதிகாலையில் சென்னை ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து.. 5 பேர் காயம்! என்ன நடந்தது?

  • சென்னை: சென்னையில் இன்று அதிகாலை கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து கிண்டி ஆளுநர் மாளிகையின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கடும் சேதம் ஏற்பட்டது.

    Advertisement

    இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சிறிய காயங்களுடன் தப்பினர். இந்தச் சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கி நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் கார் ஒன்று சென்றுள்ளது. அந்த கார் கிண்டி படேல் சாலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள வளைவில் இடது புறமாக திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சாலையில் இருந்த தடுப்பில் மோதிய கார் எதிர்ப்புறமாகச் சென்று ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவரில் பலமாக மோதி நின்றது. இதன் காரணமாக, ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவரின் சிறு பகுதி இடிந்து விழுந்தது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு சென்று காரில் இருந்தவர்களை மீட்டனர்.

    Advertisement

    தொடர்ந்து, காரில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த பாலாதாஸ் (20) என்பது தெரியவந்தது. அவருடன் ஒரு பெண் உட்பட நான்கு நண்பர்கள் பயணம் செய்ததும் தெரியவந்தது.

    ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவரில் கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த 5 பேருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்களை அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் யாரும் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். அதிவேகமாக காரை இயக்கியதே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதையடுத்து விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இது தொடர்பாகவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இரவு நேரத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் கேரளாவுக்கு முழுநேர ஆளுநராக இருப்பதால், அங்கு நடைபெற்ற சுதந்திர தின விழாலில் கலந்து கொள்வதற்காகச் சென்றுவிட்டார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆளுநர் மாளிகையில் முக்கிய விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து நடைபெறும். ஆளுநர் மாளிகை சார்பில் நடைபெறும் இந்த தேநீர் விருந்தில், முதலமைச்சர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள். இந்த தேநீர் விருந்தும் நேற்று நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Early this morning in Chennai, a car driven by a college student lost control and crashed into the compound wall of the Lok Bhavan in Guindy, causing severe damage to the wall.