சென்னை: சென்னையில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவிற்கு, ''திரைக்கதை மன்னன் இயக்குனர் கே பாக்யராஜ்' தெரு என பெயர் வைக்க மாநகராட்சி ஒப்புதல் வழங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் 'டாப்' இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ். கடந்த ஜூன் மாதம் 27 ம் தேதி மாரடைப்பு காரணமாக பாக்யராஜ் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 73.
பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமா மகன் சாந்தனு மற்றும் மருமகளுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள 'லேக் ஏரியா 5வது கிராஸ்' தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில்தான் பாக்யராஜ் வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்று மனைவி பூர்ணிமா பாக்யராஜ் கோரிக்கை வைத்தார். தமிழ் சினிமாவிற்கு பாக்யராஜ் ஆற்றிய தொண்டை பறைசாற்றும் வகையில் அவரது பெயர் சூட்ட இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்மோகனும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் 'ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்' என்ற பெயரில் தமிழ் திரை உலக சங்கங்கள் இணைந்து மறைந்த இயக்குநர் பாரதி ராஜா - பாக்யராஜ் ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்தும் விழாவை ஏற்படுத்தி இருந்தனர். இதில் அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, ''ஐயா பாக்யராஜ் வாழ்ந்த வீடு அமைந்துள்ள தெருவிற்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் விஜய் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பேன்'' என்று வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் தான் தற்போது அதற்கு முதற்கட்டமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் வாழ்ந்து மறைந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள 'லேக் ஏரியா 5வது கிராஸ்' தெருவின் பெயரை 'திரைக்கதை மன்னன் இயக்குநர் கே பாக்யராஜ்' தெரு' என்று பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி சார்பில் Post-facto ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அந்த தெருவின் பெயர் மாற்றி அமைக்கப்படும்.