சென்னை: சென்னையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை தெருவில் விடுவதை தவிர்க்கவும் மாநகராட்சி புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
உலகம் முழுவதும் ஏற்படும் ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 18,000-20,000 பேர் வரை ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர்.
ரேபிஸ் நோய் பூனை, நரி, மாடு, குதிரை என பல விலங்குகளில் இருந்து பரவும் என்றாலும், இந்தியாவை பொறுத்தவரை 99% ரேபிஸ் தெருநாய்களிடமிருந்துதான் வருகிறது. எனவேதான் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோய் பாதிப்பை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது, வளர்ப்பு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதற்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னையில் செல்லப்பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை கைவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. செல்லப்பிராணிகள் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. சாலைகள், பொது இடங்களில் கைவிடப்படும் செல்லப் பிராணிகளை மாநகராட்சி பிடித்து ஆய்வு செய்யும். செல்லப்பிராணிகளிடம் உள்ள மைக்ரோசிப், ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்படும். மைக்ரோசிப் எண் மூலம் உரிமையாளர் விவரம் அறிந்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் ரேபிஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் ரேபிஸ் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், சென்னையில் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் சென்னையில் மிக அதிக அளவில் தெரு நாய்கள் இருக்கின்றன. மாநகராட்சி கணக்கெடுப்பின்படி, சென்னையில் மட்டும் சுமார் 1.81 லட்சம் தெருநாய்கள் இருக்கின்றன. எனவே நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்படும் நாய்களின் எண்ணிக்கையை 100லிருந்து 350 ஆக சென்னை மாநகராட்சி அதிகரித்திருக்கிறது. தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், அதன் கழுத்தில் QR code பட்டை போட்டு தெருவில் மீண்டும் விடப்படுகிறது. இதன் மூலம் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என்றும் சொல்லப்படுகிறது.