சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் சில முக்கிய பகுதிகளில் லாபகரமாக இருந்தாலும், அதைப் பற்றிய சரியான புரிதலும் தெளிவும் உள்ளவர்களும், தொழில் நுணுக்கம் தெரிந்தவர்களுமே அதில் வெற்றி பெறுகிறார்கள். போதிய புரிதல் இல்லாமல் அடுத்தவர் பேச்சை நம்பிச் செயல்படுபவர்கள் ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அவ்வாறு ரூ. 1 கோடி சுருட்டிய தம்பதியினர் தற்போது கைதாகியுள்ளனர்.
"ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்" என்று யாராவது ஆசை வார்த்தை கூறிப் பணம் பறிக்க முயன்றால் உஷாராகுங்கள். சந்தேகம் வந்தால் அவர்களைப் பற்றி உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்கலாம்; அவர்கள் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து உங்களைக் காப்பாற்றி விடுவார்கள். எந்தவொரு முதலீட்டிலும் சொல்லப்படும் லாபம் நம்ப முடியாத அளவுக்கு மிக அதிகமாக இருந்தால், அது மோசடியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை யாராவது தந்தால் தாராளமாகப் புகார் அளியுங்கள்.
சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்த ஜேம்ஸ் (45) என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் பரபரப்புப் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், "எனக்கு நன்கு அறிமுகமான மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (41) மற்றும் அவரது கணவர் தாரணி (49) ஆகிய இருவரும், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினர். அதை நம்பி வங்கிப் பரிவர்த்தனை மூலமாக ரூ. 1 கோடி கொடுத்தேன். ஆனால், சொன்னபடி லாபத்தொகையையும் தராமல், அசலையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், ராஜலட்சுமியும் அவரது கணவர் தாரணியும் காவல்துறையிடம் சிக்காமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்தனர். அவர்களைக் கைது செய்யக் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதை அடுத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சித்ரா (28) என்பவர் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரியும் மருத்துவமனையில் நோயாளியாகச் சிகிச்சை பெற்றுவந்த திவ்யதர்ஷினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திவ்யதர்ஷினி, சித்ராவிடம் "அரசு வேலை வாங்கித் தருகிறேன்" என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சித்ரா, கடந்த ஆண்டு அவரிடம் ரூ. 20 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரும் அரசு வேலை வாங்கித் தராமல் திவ்யதர்ஷினி ஏமாற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை போலீசார், பண மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருந்த சேத்துப்பட்டு மங்களாபுரம் 12-வது தெருவைச் சேர்ந்த திவ்யதர்ஷினி (22), அவரது அண்ணன் குமார் (43) மற்றும் குமாரின் மனைவி சசிகலா ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரூ. 1 கோடி ரியல் எஸ்டேட் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி