சென்னை: சென்னையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 2 மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நீடிக்கிறது. கடைகளுக்கு ஆவின் பால் விநியோகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்நிலையில், அண்மை காலமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
முன்பு ஒரு ஆவின் கடைக்கு 32 பெட்டிகள் ஆவின் பால் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 20 பெட்டிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. காலை நேரத்திலேயே பல கடைகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக ஆவின் பாலின் தரம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் இரண்டு மாதமாக பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தினமும் ஆவின் பாலை நம்பியிருக்கும் குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தேநீர்க் கடை உரிமையாளர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 2 மாதங்களாகவே ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். எனினும், பொதுமக்களின் இந்தக் குற்றச்சாட்டை ஆவின் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆவின் பால் நிறுவன நிர்வாகிகள், சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும், வழக்கம்போல விநியோகம் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். ஆவின் பால் கொள்முதல் கடுமையாக சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக ஆவின் பால் கொள்முதல் குறைந்து தட்டுப்பாட்டு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரித்து, ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.