இன்னும் ஆழமா போனா கச்சா எண்ணெய்யே வந்துடும்! சென்னையில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

  • சென்னை: சென்னையில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் வரத்தொடங்கி உள்ளது. 2003-2004ல் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது போன்ற நிலை மீண்டும் வந்துள்ளது.

    Advertisement

    சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து அபாய நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நீர் இருப்பு பல மடங்கு குறைந்திருப்பது, வரும் மாதங்களில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மளமளவென சரிந்த ஏரிகளின் நீர்மட்டம்

    சென்னை மாநகரின் தினசரி குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் கடலூரில் உள்ள வீராணம் ஏரி ஆகிய 6 முக்கிய நீர்நிலைகள் பிரதான பங்கு வகிக்கின்றன. இந்த நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவோடு ஒப்பிடும்போது, தற்போதைய நிலவரப்படி மொத்த நீர் இருப்பு 5,473 மில்லியன் கன அடியாக (mcft) சரிந்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் இந்த 6 நீர்நிலைகளிலும் சேர்த்து மொத்தம் 8,202 மில்லியன் கன அடி நீர் சேமிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது 2,730 மில்லியன் கன அடி நீர் குறைவாக உள்ளது. சென்னை நகரின் மாதாந்திர குடிநீர்த் தேவை சுமார் 1 டி.எம்.சி என்ற அளவில் இருக்கும் நிலையில், தற்போதுள்ள நீர் இருப்பைக் கொண்டு அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே தேவையைச் சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    ஏமாற்றம் அளித்த பருவமழை

    வழக்கமாக மே மாத இறுதியில் அக்னி நட்சத்திரம் விடைபெற்ற பிறகு வெப்பத்தின் தாக்கம் தணியத் தொடங்கும். அதைத் தொடர்ந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு ஓரளவுக்குக் கைகொடுக்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கமான மழை பெய்யாமல் ஏமாற்றம் அளித்துள்ளது.

    சுட்டெரித்த தீவிர வெப்ப அலை காரணமாகத் தினசரி குடிநீர் நுகர்வின் அளவு கணிசமாக அதிகரித்தது. இதன் நேரடி விளைவாக, ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சரிந்துள்ளது. அதிலும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் போதிய ஆழம் இல்லாத காரணத்தால் மேலும் ஆழத்தில் தோண்டப்பட்டு வருகின்றன.

    Advertisement

    நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை

    தற்போதைய நீர் மேலாண்மை சூழல் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்: "காலநிலை மாற்றத்தால் மழையின் இயல்பு முற்றிலுமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் பரவலாகப் பெய்து வந்த மழை, இப்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே குறுகிய நேரத்தில் அதிதீவிரமாகப் பெய்துவிட்டு நின்றுவிடுகிறது. இதனால் நீர்நிலைகளுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான நீர்வரத்து பாதிக்கப்படுகிறது.

    மழைநீர்க் கட்டமைப்புகளைச் சரியாகப் பராமரிக்காமல் விடுவதும், பெய்யும் மழை வீணாகக் கடலில் கலப்பதும் நிலமையை மேலும் மோசமாக்கும். எனவே, வீணாகும் மழைநீரை முழுமையாகத் தேக்கி வைப்பதும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது" என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    Advertisement

    குடிநீர் விநியோகத்தை சீராகப் பராமரிக்க மாற்றுத் திட்டங்களைத் துரிதப்படுத்துவதும், பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் இந்நேரத்தில் மிக அவசியமாகும்.

    English Summary

    Chennai Faces Drinking Water Crisis as Key Reservoirs Dry Up to Alarming Lows