கேன்சல் பண்ணுங்க.. சீறிய விஜய்.. சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி நடைபாதை ஊழல்? டெண்டர் ரத்து

  • சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் (GCC) சுமார் 284 கோடி ரூபாய் மதிப்பிலான நடைபாதை (Footpath) அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை நகரம் முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த இந்த நடைபாதை கட்டுமானத்திற்கான அனைத்து டெண்டர்களையும் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சாதகமாக டெண்டர்களை முன்கூட்டியே நிர்ணயம் செய்தது, திட்ட மதிப்பீட்டை வழக்கத்தை விட நான்கு மடங்கு வரை அதிகமாக உயர்த்தியது மற்றும் ஏலத்தின் போது கூடுதலாக 10 சதவீத தொகையை ஏற்றி காட்டியது போன்ற பல்வேறு முறைகேடுகள் இதில் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடுகள் அப்படியே அனுமதிக்கப்பட்டிருந்தால், அரசு கருவூலத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    Advertisement

    திட்டத்தின் பின்னணியும் டெண்டர் ரத்தும்:

    கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி மேயர் ஆர். பிரியா தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்த நடைபாதை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 20-ஆம் தேதியே சிறப்பு திட்டங்கள் துறை இதற்கான டெண்டர்களை கோரியது. ஆனால், மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    சென்னை நகரின் முக்கிய சாலைகளான அடையாறு சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் ஃபோர்த் அவென்யூ, ஜவஹர்லால் நேரு மைதானத்தை ஒட்டியுள்ள ராஜா முத்தையா சாலை, கீழ்ப்பாக்கம் பர்னபி சாலை மற்றும் மயிலாப்பூர் டாக்டர் பி.எஸ். சிவசாமி சாலை உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் நடைபாதைகளை அமைக்க இந்த திட்டம் 35 பேக்கேஜ்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த 35 பணிகளுக்கும் மிகக் குறைந்த தொகையைக் குறிப்பிட்ட 'L1' ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்ட போதிலும், மாநகராட்சி தரப்பில் இன்னும் பணி ஆணைகள் (Work Orders) வழங்கப்படவில்லை. அதற்குள்ளாகவே இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    Advertisement

    நான்கு மடங்கு கூடுதல் மதிப்பு:

    ஒவ்வொரு பேக்கேஜிலும் இரண்டு முதல் மூன்று சாலைகளுக்கான நடைபாதை பணிகள் சேர்க்கப்பட்டு, அதன் டெண்டர் மதிப்பு ரூ. 8 கோடி முதல் ரூ. 9 கோடி வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் திட்டமிட்டே மிக அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுவாக, இது போன்ற சாலைகளில் நடைபாதை அமைக்க வெறும் சிமெண்ட் பூச்சு மற்றும் கல் கட்டுமான வேலைகளே முதன்மையாக இருக்கும். இதற்கு அதிகபட்சமாக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை மட்டுமே செலவாகும். ஆனால், இங்கு சுமார் 9 கோடி ரூபாய் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    உதாரணமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 500 மீட்டர் நீளமுள்ள புகழ்பெற்ற காதர் நவாஸ் கான் சாலை பாதசாரி வளாக (Pedestrian Plaza) திட்டத்திற்கு, நிலத்தடி கேபிள்களை மாற்றுவது, அழகுபடுத்துதல், விளக்குகள், இருக்கைகள் மற்றும் பிரீமியம் தர தரைத்தளங்கள் என அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே ரூ. 19 கோடி தான் செலவானது.

    ஆனால், இந்த ரத்து செய்யப்பட்ட திட்டத்தில் வெறும் சாதாரண சிமெண்ட் நடைபாதை அமைப்பதற்கே ஒரு கிலோமீட்டருக்கு 9 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் உள்ள பார்க் ரோடு மற்றும் நார்த் அவென்யூ சாலையில் ஒரு கிலோமீட்டர் நடைபாதை அமைக்க ரூ. 8.2 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது. இது வழக்கமான கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிகம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    Advertisement

    கூட்டுச் சதி மற்றும் முறைகேடுகள்:

    ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்துக் கொண்டு, போட்டி இல்லாமல் டெண்டர்களைப் பகிர்ந்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகப்பேரில் உள்ள ஜவஹர் ஸ்ட்ரீட் மற்றும் ஆறாவது மெயின் ரோட்டில் ரூ. 8.3 கோடி மதிப்பிலான பேக்கேஜ் 9-க்கான டெண்டரில் 'P and CE Projects' மற்றும் 'Sri Sivaram and Co' ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. இதில் 'P and CE Projects' நிறுவனம் அரசு மதிப்பீட்டை விட 9 சதவீதம் கூடுதல் தொகை கோரியிருந்த போதிலும், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பேக்கேஜ் 2-லும் இதே நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்று தங்களுக்குள் விலையை நிர்ணயம் செய்துள்ளன.

    Advertisement

    பொதுவாக ஆரோக்கியமான போட்டி இருக்கும் டெண்டர்களில், ஒரு சிறிய சாலை வெட்டுப் பணிக்குக் கூட குறைந்தபட்சம் 20 ஒப்பந்ததாரர்கள் வரை பங்கேற்பார்கள். மேலும், அரசு நிர்ணயித்த மதிப்பை விட குறைவான தொகைக்கே (Minus bidding) வேலை செய்யப் போட்டியிடுவார்கள். ஆனால், இங்கு திட்டமிட்டே போட்டி தவிர்க்கப்பட்டுள்ளது.

    அடுத்தகட்ட நடவடிக்கை:

    இது குறித்துப் பேசிய உயர் அதிகாரி ஒருவர், "இந்த திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், இத்திட்டம் முழுமையாகக் கைவிடப்படாது. டெண்டர்கள் மட்டுமே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. விரிவான திட்ட அறிக்கை (DPR) மீண்டும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, சரியான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் புதிய டெண்டர் விரைவில் வெளியிடப்படும்" என்று கூறினார்.

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS), கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட்ட அனைத்து டெண்டர்களையும் தீவிரமாகச் சரிபார்க்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது சுமார் 40-க்கும் மேற்பட்ட சிவில் பணிகள் தீவிர ஆய்வில் உள்ளன. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, புதிய திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Chennai GCC Footpath Scam: ₹284 Crore Tenders Cancelled Over Massive Overpricing and Irregularities