Ilaiyaraaja: இளையராஜா பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை!

  • சென்னை: இசைஞானி இளையராஜாவின் "பொதுவாக என் மனசு தங்கம்.." என்ற பாடலை பயன்படுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    Advertisement

    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி "ஹேப்பி ராஜ்" என்ற படம் வெளியானது. இந்த படத்தில் 1980 ஆம் ஆண்டு ரஜினி நடித்த முரட்டுக் காளை படத்தில் இளையராஜா இசையமைத்த "பொதுவாக என் மனசு தங்கம்" என்ற பாடல் உருமாறி பயன்படுத்தப்பட்டிருந்தது.

    Advertisement

    தனது அனுமதியில்லாமல் இந்த பாடலை உருமாற்றி ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்தியதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவின் பாடலான "பொதுவாக என் மனசு தங்கம்.. " பாடலை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்த தடை விதித்தார்.

    மேலும் இந்த பாடலை என் அனுமதியில்லாமலும் உருமாற்றியும் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கமளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். "ஹேப்பி ராஜ்" படம் வெளியாகி 3 மாதங்களான நிலையில் தற்போது அந்த பாடலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இளையராஜாவை பொருத்தமட்டில் அவரிடம் கேட்டுவிட்டு அவரது பாடல்களை எந்த படங்களிலும் பயன்படுத்துவதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்கிறார். ஆனால் கேட்காமல் பயன்படுத்தினால் அது யாருடைய படமாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து விடுகிறார்.

    அந்த வகையில் டியூட் படத்தில் "கருத்த மச்சான்..", "100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்" ஆகிய பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியதை கண்டித்து இளையராஜா தொடர்ந்த வழக்கால் அந்த பாடல்கள் அந்த படத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது.

    அது போல் நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்ச குருவி' ஆகியவை பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில் அந்த பாடல்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    Advertisement

    என்னதான் இளையராஜாவின் பாடல்கள் எக்கோ, சோனி ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு அவற்றிடம் இருந்து தயாரிப்பாளர்கள் வாங்கி படங்களில் பயன்படுத்தினாலும் அந்த பாடலின் டியூனுக்கான இசை உரிமை இளையராஜாவிடமே உள்ளது. எனவே அவரிடமும் தனி அனுமதி பெற வேண்டும் என்பதுதான் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.