தவெகவில் இணைந்ததும் சி.விஜயபாஸ்கருக்கு பேரிடி! குட்கா வழக்கை 12 வாரங்களில் முடிக்க கோர்ட் உத்தரவு!

  • சென்னை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைக்கேடு வழக்கினை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    குட்கா முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட சி.விஜயபாஸ்கர், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். ஒரு வேளை இந்த வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிராக தீர்ப்பு வெளியானால் அது, தனது கட்சியில் அவரை இணைத்த விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படும்.

    Advertisement

    தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, அதேபோன்று சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ். ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உட்பட 26 பேருக்கு எதிரான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலங்கள் அளிக்காதவர்கள் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருப்பதால், அவர்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    Advertisement

    இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜார்ஜினுடைய மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குட்கா முறைக்கேடு வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில் சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும், பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தவிதமான தவறும் இல்லை என நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    முன்னாள் ஆணையர் ஜார்ஜின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தன்னுடைய அந்த உத்தரவில் தெரிவித்திருக்கிறார். அதே சமயம், குட்கா முறைக்கேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். குட்கா விஜயபாஸ்கர் என்றே அழைத்து வந்தார்.

    இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்துவிட்டார். "குட்கா கரையை நீக்கும் வாஷிங்மெஷின்தான் தவெக" என திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்திருந்தார்.

    Advertisement

    அது போல் அறப்போர் இயக்கமும் சி.விஜயபாஸ்கரின் ஊழல்களை மறந்து தவெகவில் இணைத்துக் கொண்டதற்கு விஜயை விமர்சித்திருந்தது. ஏற்கெனவே தவெகவில் பல்வேறு குற்றவாளிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் இந்த வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அது, ஊழலுக்கு எதிரான கட்சிதான் தவெக என கூறி வரும் விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    English Summary

    Chennai HC directs special court to complete the trial in the Gutkha scam case within 12 weeks. In this case Former Minister C.vijayabaskar's name present.