சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளையொட்டி நாடு முழுவதும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பேரணி செல்வது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி செல்ல முயல்வதும்,தமிழக அரசு அனுமதி மறுப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''ஆர்எஸ்எஸ் நிறுவன நாளையொட்டி தமிழகத்தில் அக்டோபர் 18, 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒருநாள் அணிவகுப்பு பேரணி செல்ல அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த மனுத்தாக்கல் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய 2 தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏற்கனவே உயர்நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் பின்பற்றப்படும். என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 என 2 நாட்களில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி அதிரடியாக உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நேரம், வழித்தடங்கள், இடங்களை அக்டோபர் 19 ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்றும் சென்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கின்போது உயர்நீதிமன்றம் காவல்துறையை சாடியது.''ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. ஏற்கனவே இந்த நீதிமன்றம் நிராகரித்த காரணங்களை தான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது'' என்று அதிருப்தி தெரிவித்தது. அதுமட்டுமின்றி எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்து உயர்நீதிமன்றத்தை நாடும் நிலை வராது என்று நம்புகிறேன் என்றும் கூறினார்.