5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை செப்.8 வரை நீட்டித்த சென்னை ஹைகோர்ட்

  • சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை ஹைகோர்ட் விதித்த தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான தடை வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியை வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார்.

    Advertisement

    அது போல் கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர். விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு அவர்கள் ராஜினாமா செய்தனர்.
    ராஜினாமா செய்துவிட்டு இவர்கள் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலையில் உள்ள போது இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன் ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என கூறி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து, இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டசபை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு கடந்த ஜூலை 31 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு யாரும் வராததால் மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நீதிபதிகள் ஒத்தி வைத்த நிலையில் வழக்கு விசாரணையும் அன்று நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் 5 தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்க விதிக்கப்பட்ட தடை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Advertisement

    ஒரு சட்டசபை தொகுதி காலியாகிவிட்டால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே நீதிபதிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை.

    அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கவனமும் இடைத்தேர்தல் மீது உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. அவை திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகியவை ஆகும்.

    English Summary

    Chennai Highcourt's stay on announcing byelection for 5 constituencies ends today. All are focusing on when will the by election date announces?