மேலிடம் மன்னிப்பு கேட்டால் போதுமா?” பொருளாதார ஆய்வாளர் கலையரசன் கைது விவகாரம். .ஐகோர்ட் காட்டம்

  • சென்னை: அவதூறு வழக்கில் திமுக பெண் கவுன்சிலருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், மேலும் சில கருத்துகளை கூறியது. பொருளாதார ஆய்வாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இதில் மேலிடம் மன்னிப்பு கேட்டது நிகழ்ந்த தவறுக்கு பொறுப்பேற்பதாகாது என்றும் கூறினார்.

    Advertisement

    சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் சுதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சுதா ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், சுதாவுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    Advertisement

    போலீஸ் நடவடிக்கை கூடாது

    இந்த வழக்கின் விசாரணையின்போது அரசியல் பேச்சுகள், காவல்துறையின் செயல்பாடு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து அவர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யலாம் என்றும் அதற்காக காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் விமர்சனங்கள், கேலிகள் மற்றும் எதிர்ப்புகளை சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பொருளாதார ஆய்வாளர் கலையரசன்

    இதற்கு உதாரணமாக பொருளாதார ஆய்வாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை நீதிபதி சுட்டிக்காட்டினார். மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகளில் பணியாற்றிய புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான கலையரசன், அதிகாலை சுமார் 5 மணியளவில் சாதாரண உடையில் வந்த போலீசாரால் அவரது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    அமைச்சரே தவறை ஒப்புக்கொண்டார்

    ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, போலி கணக்கு மூலம் அவதூறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த விவகாரத்தில் பொருளாதார வல்லுநர் கலையரசனுக்கு எதிராக புகாரோ, ஆதாரமோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லாத நிலையில், கைது செய்யப்படுகிறார். பிறகு அவர் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார். பின்னர் முதலமைச்சர் அவரை தலைமை செயலகத்தில் வரவேற்றதுடன், ஒரு அமைச்சரும் நிகழ்ந்த தவறைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    மன்னிப்பு கேட்டால் போதுமா?

    எனினும், அந்த சம்பவம் குறித்து தான் எந்த முடிவுக்கும் வரவில்லை என்று தெளிவுபடுத்திய நீதிபதி, "மேலிடம் மன்னிப்பு கேட்டது நிகழ்ந்த தவறுக்கு பொறுப்பேற்பதாகாது" என்று குறிப்பிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில்லாத ஒரு சாதாரண குடிமகன் இதேபோன்ற புகாரின் அடிப்படையில் அதிகாலையில் கைது செய்யப்பட்டிருந்தால், அந்த சமூக வலைத்தள கணக்கு அவருடையதா என்று விசாரிப்பதற்கு முன்பே சிறைவாசம், நீதிமன்ற காவல், விசாரணை என நீண்ட நடைமுறைகளை சந்தித்திருக்க நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    Advertisement

    காவல்துறையின் செயல்பாட்டை மதிப்பிடும்போது செல்வாக்கு மிக்கவர்களை எப்படி நடத்துகிறது என்பதை மட்டும் பார்க்கக் கூடாது என்றும் யாருக்கும் தெரியாத சாதாரணக் குடிமக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்றும் நீதிபதி என்.ரமேஷ் வலியுறுத்தினார். திமுக கவுன்சிலர் வழக்கு விசாரணையின் போது பேச்சுரிமை மற்றும் அதற்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு தொடர்பாக நீதிபதி கூறியுள்ள இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Madras High Court referred to economist Kalaiyarasan's early-morning arrest(பொருளாதார வல்லுநர் கலையரசன் கைது குறித்து சென்னை ஐகோர்ட்): Chennai High Court on Kalaiyarasan Arrest latest news in tamil.