சென்னை: பிற மதங்களை சேர்ந்தவர்கள் தங்களது மத அடையாளங்களை அணிந்து கொண்டு, ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களின் வளாகத்துக்குள் கூட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே கோயில்களில் கொடிமரத்தை தாண்டி செல்வது தொடர்பாக கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயில் நுழைவு தொடர்பான சட்டங்களையும் ஆகம விதிகளையும் அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி. முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தனர்.
முன்பு பிற மதங்களை சேர்ந்தவர்கள் கோயில்களில் கொடிமரத்தை கடந்து செல்ல விரும்பினால், அந்த கோயிலின் தெய்வத்தின் மீது நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருப்பதாக உறுதி அளிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கோயில் வழக்கங்களையும் பின்பற்றுவதாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இப்போது அதோடு சேர்த்து பிற மதங்களின் அடையாளங்களை அணிந்திருப்பவர்களும் இதுபோல தெய்வத்தின் மீது மரியாதையையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக உறுதியளிக்க வேண்டும் என நீதிமன்றம். அப்படி உறுதியளிக்காதவர்கள் ஆகம கோயில் வளாகத்துக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் பிற மத அடையாளங்களை அணிந்திருக்கும் அனைவருக்கும் எந்தவித விதிவிலக்கும் இல்லாமல் தடை என்று நீதிமன்றம் கூறவில்லை. பிற மத அடையாளங்களை அணிந்திருக்கும் ஒருவர், கோயில் நிர்வாகம் குறிப்பிடும் உறுதிமொழியில் கையெழுத்திட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் மாற்று மத அடையாளங்களுடன் சிலர் நுழைந்ததாகவும், அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த சம்பவத்தின்போது கோயில் ஊழியர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்ததாக கூறி அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பத்ருதீன் முஸ்தபா, தேர்தலுக்கு பிறகு கோயில் வசதிகளை ஆய்வு செய்யும் உரிமை தனக்கு இருப்பதாக கூறி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்றதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கும்பாபிஷேகத்தின்போது அவர் கோயில் கோபுரங்களின் மீது ஏறியதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தேவையான உறுதிமொழியை அளிக்காமல் திருச்செந்தூர் கோயிலுக்குள் சென்ற சம்பவத்தையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், உறுதிமொழியில் கையெழுத்திட்ட பிறகே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அவரிடம் மதம் மாறுமாறு யாரும் கூறவில்லை என்றும் கோயில் தெய்வத்தின் மீது மரியாதை இருப்பதாக உறுதியளிக்க மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுவே அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 1972ம் ஆண்டு கல்யாண் தாஸ் vs தமிழ்நாடு அரசு வழக்கில், பிற மதத்தினரை கோயில் வளாகத்துக்குள் அனுமதிப்பது தொடர்பான விதி ரத்து செய்யப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 2024ம் ஆண்டு டி. செந்தில்குமார் vs தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்பையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத பிற மதத்தினரை கொடிமரத்தை தாண்டி அனுமதிக்கக் கூடாது என்றும் தெய்வத்தின் மீது நம்பிக்கையும் கோயில் மரபுகள் மீது மரியாதையும் இருப்பதாக உறுதியளித்தால் அனுமதிக்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவு ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஐயப்பன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் ஆகம விதிப்படி இயங்குவதில்லை என்பதால் அங்கு பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபடுவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.நீதிபதிகள்
அனுமதிக்கக்கூடாது
அமைச்சர்கள் மீது அதிருப்தி
முதல்வருக்கு பாராட்டு
முந்தைய தீர்ப்புகள்