தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து

  • சென்னை: முன்னாள் சென்னை காவல் ஆணையரும், தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் தலைவருமான அருண் ஐபிஎஸ்-ஐ சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அதோடு ரியல் எஸ்டேட் அதிபருக்கு எதிராக அவர் பதிவு செய்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமிநாராயணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

    Advertisement

    பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக இருப்பவர் சந்தோஷ் ஷர்மா. இவர் சென்னை கொளத்தூரில் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதில் 78 குடியிருப்புகளில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. அவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    அடுக்குமாடி குடியிருப்புகளை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து பணமோசடி செய்த புகாரில் சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நடவடிக்கை என்பது சென்னை காவல்துறை ஆணையராக அருண் ஐபிஎஸ் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவு 2025 செப்டம்பர் மாதம் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

    தற்போது அருண் ஐபிஎஸ் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையின் தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் சந்தோஷ் ஷர்மா மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து அவரது மகள் வர்ஷா ஷர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
    இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அருண் ஐபிஎஸ் கடந்த 27 ம் தேதி நேரில் ஆஜரானார்.

    Advertisement

    முன்னதாக அருண் ஐபிஎஸ் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வழங்க சென்ற நீதிமன்ற ஊழியரை 2 மணிநேரம் வரை காத்திருக்க வைத்ததற்கு நீதிமன்றம் கடும் அதிருப்தியை காட்டியது. காத்திருக்கும்படி கூறிய நீதிமன்ற ஊழியரை நீதிமன்றம் வரும்வரை அருண் ஐபிஎஸ்ஸை காத்திருக்கும்படி நீதிமன்றம் தெரிவித்தது. அதன்பிறகு நடந்த வழக்கு விசாரணையில் அருண் ஐபிஎஸ் சார்பில், ''28 ஆண்டு கால போலீஸ் துறை பணியில் குண்டர் தடுப்பு சட்டத்தை எப்போதும் தவறாக பயன்படுத்தியது இல்லை'' என்று கூறினார்.

    இதையடுத்து நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தோஷ் ஷர்மா மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வேளையில் நீதிமன்றம் அருண் ஐபிஎஸ்ஸின் செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

    Advertisement

    இதுதொடர்பாக நீதிமன்றம், ''ஐபிஎஸ் அதிகாரி அருண் அவ்வப்போது இதுபோன்ற ஆணைகளை பிறப்பிப்பதும், அதன்பிறகு இந்த ஆணைகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது. குண்டர் சட்டத்தை எப்போதும் அலட்சியமாக பிறப்பிக்க கூடாது என்பதை அருண் ஐபிஎஸ் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் குண்டர் தடுப்பு சட்டம் என்பது கைதியின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்த வழக்கில் குண்டர் சட்டம் என்பது வேண்டுமென்றே பிறப்பிக்கப்படடுள்ளது. பொதுவாக இப்படியான கருத்துகளை நீதிமன்றம் கூறாது. ஆனால் ஐபிஎஸ் அருண் இப்படியான உத்தரவுகளை பிறப்பிப்பதில் பழக்கப்பட்டவராக இருக்கிறார். அதிலும் பல உத்தரவுகள் இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்த பிறகு ரத்தாகி உள்ளன.

    Advertisement

    ஏனென்றால் இந்த வழக்கு பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இல்லை. இந்த வழக்கிற்கு குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தியதில் எந்த நியாயமும் இல்லை. 28 ஆண்டுகள் ஐபிஎஸ்ஸாக சேவையாற்றும் அருண் இதனை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவர் 28 ஆண்டுகள் ஐபிஎஸ்ஸாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். 28 வருட அனுபவத்துடன் இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டால், அது வேண்டுமென்றேயும் சட்டத்தையும் உண்மைகளையும் முழுமையாக அறிந்தும் வேண்டுமேன்ற செய்தது என பொருள்படும்.

    இருப்பினும் கூட அவர் தவறான உத்தரவு பிறப்பித்தது பற்றி நினைக்காமல் தனது செயலுக்கு நியாயம் கற்பித்துள்ளார். தற்போது பிறப்பிக்கப்பட்ட இந்த குண்டர் தடுப்பு சட்டத்துக்காக நாங்கள் அருண் ஐபிஎஸ்ஸை கண்டிக்கிறோம்'' என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    English Summary

    Arun IPS VS Chennai High Court: The Chennai High Court has severely reprimanded Arun IPS, the former Chennai Police Commissioner and current Head of the Tamil Nadu Directorate of Vigilance and Anti-Corruption. Furthermore, a division bench comprising Justices G.R. Swaminathan and V. Lakshminarayanan summarily quashed the detention order issued by him against a real estate tycoon under the Goondas Act.