சொத்து வரி எப்படி கூடிச்சு? சிறப்பு முகாம்களில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

  • சென்னை: சென்னையில் சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இன்று ஷெனாய் நகரில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏன் சொத்து வரி உயர்ந்தது, என்ன காரணம் என சொல்லி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பாக சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

    Advertisement

    சென்னையில் வீடுகள் கட்டிடங்களுக்கான சொத்து வரி அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னறிவிப்பு இன்றி பலமடங்கு அதாவது 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக சொத்து உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி கூறியது.

    Advertisement

    ஷெனாய் நகரில் சிறப்பு முகாம்

    எனினும், 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி மறு மதிப்பீடு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனைகள் இருந்தால், மக்கள் தெரிவிக்கலாம் என்றும் அதற்காக இன்று சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் சென்னை மாநகராட்சி கூறியிருந்தது. அதன்படி, ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி வட்டார ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்கு வாதம்

    இந்த முகாமுக்கு வந்த சொத்து உரிமையாளர்கள் தங்களின் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இந்த முகாமுக்கு வந்த பலரும், கடந்த முறை ஆயிரம் ரூபாய் அளவுக்கு தான் சொத்து வரி செலுத்தியிருந்தேன். ஆனால் இந்த முறை 2 ஆயிரத்திற்கும் மேல் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Advertisement

    அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "ஏற்கனவே உங்கள் சொத்து மதிப்பை விட குறைவாக நீங்கள் வரி செலுத்தக்கூடிய நிலை இருந்துள்ளது. அதையெல்லாம் மதிப்பீடு செய்து முறையாக சீர்படுத்தியதன் விளைவாகவே சொத்து வரி அதிகரித்துள்ளது என்று விளக்கம் அளித்து வருகிறார்கள். ஆனால், அதிகாரிகளின் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் சொத்து உரிமையாளர்கள் சிலர், அவர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அடுத்த 15 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கும்

    இதனால், சிறப்பு முகாம் இன்று காலையில் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக காட்சியளிக்கிறது. வாக்கு வாதம் செய்தவர்களிடம் எழுத்துப்பூர்வமாக உங்கள் புகாரை எழுதிக்கொடுங்கள், உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எட்டப்படும் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    சொத்து வரி உயர்த்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க சென்னை வட்டார அலுவலகங்களில் அடுத்த 15 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    English Summary

    Chennai: Amidst widespread complaints from the public regarding a manifold increase in property tax in Chennai, a special camp was held today in Shenoy Nagar. Members of the public who attended the camp engaged in heated arguments with Chennai Corporation officials, demanding to know the reasons behind the tax hike. The camp is witnessing a tense atmosphere as citizens question the officials about the basis for the increase.