சென்னை சிட்டி உள்ளே.. அடியோடு மாறப்போகும் 3 முக்கியமான இடங்கள்.. 80 கிமீ தூரத்திற்கு மாஸ்டர் மூவ்

  • சென்னை: சென்னையின் முக்கியமான 3 பகுதிகள் அடியோடு மாற்றப்பட உள்ளன. இதற்கான முக்கியமான உத்தரவு சென்னை மாநகராட்சி மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.

    Advertisement

    பெருநகர சென்னை மாநகராட்சி சென்னையின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இதன் முதற்கட்டமாக, சென்னையின் முக்கியப் பகுதிகளான பெரம்பூர்-வியாசர்பாடி, அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டை ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள சுமார் 80 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை முழுமையாக மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இந்த விரிவான உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக தோராயமாக ₹1.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    அடியோடு மாறும் உட்கட்டமைப்பு

    இம்முறை வெறும் சாலைகளை மட்டும் சீரமைக்காமல் அல்லது பூங்காக்களை மட்டும் தனியாக மேம்படுத்தாமல், ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒருசேர மாற்றியமைக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் முக்கிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.

    சேதமடைந்த சாலைகள் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைக்கப்படும். முக்கிய சந்திப்புகள் விபத்து நடக்க முடியாத அளவிற்கு சர்வதேச நகரங்களில் உள்ளதை போன்ற பகுதிகளாக மாற்றப்படும்.

    மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க அதிநவீன மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்படும். அத்துடன் நகர்ப்புற மரங்கள் மற்றும் செடிகள் நடப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளடக்கிய நடைபாதைகள் அமைக்கப்படும். பொது போக்குவரத்துடன் இந்த சாலைகள் இணைக்கப்படும்.

    நவீன எல்.இ.டி தெருவிளக்குகள் பொருத்தப்படும். மேலும் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித் தரும் விளம்பரப் பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    Advertisement

    மூன்று முக்கியப் பகுதிகள்

    சென்னை மாநகராட்சி இந்த 80 கிமீ சாலை மேம்பாட்டுத் திட்டத்தை மூன்று முக்கிய மண்டலங்களாகப் பிரித்து செயல்படுத்த உள்ளது.

    பெரம்பூர் - வியாசர்பாடி பகுதி

    பெரம்பூர் - வியாசர்பாடி பகுதியில் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. கிளை சாலை உட்பட மொத்தமாக இப்பகுதியில் உள்ள 20 கிமீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த ₹47.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அம்பத்தூர் தொழிற்பேட்டை

    ஆசியாவின் முக்கிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,167 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,800 தொழிலகங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 42.58 கிமீ நீளமுள்ள 128 சாலைகளும், 40 கிமீ நீளமுள்ள 240 மழைநீர் வடிகால்களும், 1,890 தெருவிளக்குகளும் உள்ளன. இங்கே உள்ள 40 கிமீ சாலையை முழுமையாக மேம்படுத்த ₹47.20 லட்சம் திட்டமிடல் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கிண்டி தொழிற்பேட்டை (20 கிமீ சாலைகள்)

    சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிண்டி தொழிற்பேட்டை 404.08 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 தொழில் நிறுவனங்களை கொண்டுள்ளது. இங்குள்ள 15.28 கிமீ நீளமுள்ள 82 சாலைகள் மற்றும் 23.5 கிமீ நீளமுள்ள மழைநீர் வடிகால்களை மேம்படுத்தும் வகையில், 20 கிமீ சாலை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ₹23.60 லட்சம் ஆகும்.

    அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளின் இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளன.

    English Summary

    Chennai Infrastructure Upgrade: Tamil Nadu govt to transform 80 km of roads in Perambur, Ambattur, Guindy