சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் மேயராக இருக்கும் திமுகவைச் சேர்ந்த ஆர். பிரியாவுக்கு எதிராக இணையத்தில் கடுமையான விமர்சனங்களும் உருவக் கேலிகளும் வெடித்துள்ளன. ஒரு பெண்ணாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயராகவும் பொறுப்பேற்ற பிரியாவை குறிவைத்து நடத்தப்படும் இந்த அத்துமீறல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
ஆட்சி மாற்றமும் எல்லை மீறும் தனிநபர் தாக்குதல்களும்
தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவியேற்ற சூழலில், சென்னை மாநகராட்சியை வழிநடத்தும் மேயர் பிரியா சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வசைபாடப்பட்டு வருகிறார். அரசியல் கருத்து மோதல்களையும் கடந்து, அவரது தனிப்பட்ட தோற்றம், உடை, தலைமுடி அலங்காரம் வரை அனைத்தையும் கிண்டல் செய்து கொச்சையான பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியான தவெக-வின் ஆதரவாளர்கள் மற்றும் முதல்வரின் தீவிர ஆதரவாளர்கள் என்ற போர்வையில் பல கணக்குகள் மூலம் இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசியல் ரீதியாக ஒரு மாநகரத்தின் முதன்மை குடிமகளாக இருக்கும் ஒரு பெண்ணை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் அவரது பாலினம் மற்றும் உருவத்தை வைத்து அசிங்கப்படுத்துவது அரசியல் நாகரிகத்தை அடியோடு குலைப்பதாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் என்ற பெருமை பெற்ற பிரியாவுக்கு இவ்வளவு அநீதியும் அவதூறுகளும் நடக்கும்போது, மேடைக்கு மேடை பெண்ணியம் பேசும் பல செயற்பாட்டாளர்களும் தலித் உரிமை அமைப்புகளும் மௌனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண விவகாரங்களுக்குக் கூட அறிக்கை வெளியிட்டு போராட்டத்தில் குதிக்கும் இந்த அமைப்புகள், அதிகாரத்தில் இருக்கும் தவெக அரசை எதிர்க்கத் தயங்கி அமைதி காக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பெண்ணுரிமை மற்றும் சமூக நீதி என்பது குறிப்பிட்ட அரசியல் மேடைகளுக்கான முழக்கம் தானா, ஒரு தலித் பெண் அதிகாரத்தில் இருக்கும்போது தாக்கப்படும்போது ஏன் இந்த ஓரவஞ்சனை என்கிற ஆதங்கக் குரல்கள் சாமானிய மக்களிடம் எழத் தொடங்கியுள்ளன. மறுபுறம், சொந்தக் கட்சி மேயருக்கு எதிராக தொடர்ச்சியான ஆபாச பதிவுகளும் இழிவுபடுத்தும் நடவடிக்கைகளும் அரங்கேறிய போதிலும், திமுகவின் தலைமை களத்தில் இறங்கி உறுதியான எதிர்வினையை ஆற்றவில்லை என்ற அதிருப்தி தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. மேயர் பிரியா சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்து போராடும் சூழலே காணப்படுகிறது. திமுகவின் முக்கிய தலைவர்கள் மேடைப் பேச்சோடு நிறுத்திக் கொள்கிறார்களே தவிர, களத்தில் இறங்கி தனது மேயருக்குப் பக்கபலமாக தவெக அரசின் அடக்குமுறையையும் இணையத் தாக்குதலையும் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உறுதியாக முறியடிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாரம் கைவிட்டுப் போனதால் திமுக தலைமையே தயக்கத்தில் இருக்கிறதா என்ற பேச்சும் அரசியலில் கேட்கிறது. இதுவே திமுக ஆட்சியில் இருந்து தவெக மேயர் இப்படி நடத்தப்பட்டு இருந்தால் பெண் உரிமை என்னாச்சு.. தலித் உரிமை என்னாச்சு என்று தவெக பெரிய புயலையே கிளப்பி இருக்கும் என்கிறார்கள் திமுகவினர். மாற்றுக்கருத்துக்கள், நிர்வாகக் குறைகள் இருந்தால் அதை ஜனநாயக ரீதியாக விமர்சிப்பதில் எவருக்கும் எந்த மறுப்பும் இருக்க முடியாது. ஆனால், மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒரு இளம் பெண்ணை இணையத்தில் வசைபாடுவதும், அவரின் சுயமரியாதையைக் காயப்படுத்துவதும் எந்த வகையிலும் ஆரோக்கியமான அரசியலாகாது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தவெக அரசு தங்களது இணையதள ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தவும், காவல்துறையின் மூலம் முறையான நடவடிக்கை எடுக்கவும் தவறினால் அது மேலும் சமூக பதற்றத்தையே உருவாக்கும். அதே வேளையில், பெண்ணுரிமை பேசுபவர்களும் தனது சொந்தக் கட்சியும் துணை நிற்காத நிலையில், இந்த இணைய அத்துமீறல்களை ஒரு தலித் பெண் மேயர் தனித்து நின்று எதிர்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.மௌனம் காக்கும் தலித் அமைப்புகளும் பெண்ணியவாதிகளும்
திமுக தலைமை உண்மையில் துணை நிற்கிறதா?
அரசியல் நாகரிகம் எங்கே போகிறது?