சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் டைடல் பார்க் அருகே திடீரென ஏற்பட்ட 5 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்தது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த கார் கவிழ்ந்ததால் மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவான்மியூரில் இருந்து தரமணி நோக்கிச் செல்லும் சாலையில் திருவான்மியூர் ரயிலடி எதிரே சாலையில் காலை 10.45 மணிக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ஒரு கார் விழுந்தது. ஓட்டுநர் பாதுகாப்பாக உள்ளார். வாகனமும் பத்திரமாக மீட்கப்பட்டது. தற்போது அந்த பள்ளத்தை கான்கிரீட் கொண்டு நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் தளப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. திருவான்மியூர் ஓஎம்ஆர் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து தொழில்நுட்ப விசாரணை நடந்து வருகிறது என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய சாலையாகும். இங்கு காலை வரிசையாக வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு கார் அந்த சாலையை கடக்கும்போது திடீரென பள்ளம் ஏற்பட்டு லேசாக அந்த சாலை பள்ளத்தில் சாய்ந்தது. உடனே சுதாரித்த ஓட்டுநர் அந்த காரில் இருந்து இறங்கிவிட்டார். பின்னர் அந்த கார் அப்படியே அந்த 5 அடி பள்ளத்தில் சாய்ந்தது. தற்போது போக்குவரத்து போலீஸார் சொகுசு காரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளத்தை சுற்றி பேரிகார்டு அமைத்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சொகுசு கார் உருண்டு விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மெட்ரோ பில்லருக்கு பள்ளம் தோண்டும் போது அதிர்வுகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதுசென்னை ஓஎம்ஆர் டைடல் பார்க் அருகே சாலையில் 5 அடியில் திடீர் பள்ளம்! தலைக்குப்புற கவிழ்ந்த கார்