சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் முக்கியத் திட்டமான இரண்டாம் கட்ட (Phase 2) மெட்ரோ ரயில் சேவையின் முதல் பாதையான பூந்தமல்லி டூ வடபழனி வழித்தடம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
ஒட்டுமொத்தப் பணிகளும் முடிவடைந்து, அனைத்து பாதுகாப்புக் குழுக்களின் இறுதி ஒப்புதல்களும் கிடைத்து கடந்த நான்கு மாதங்களாகியும் இன்னும் இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாததால், சென்னைவாசிகள் தங்களின் பொறுமையை இழந்து சமூக வலைதளங்களில் மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சென்னை மெட்ரோவின் 118.9 கி.மீ நீளமுள்ள இரண்டாம் கட்ட திட்டமானது மாதவரம் டூ சிப்காட் (காரிடார் 3), பூந்தமல்லி டூ லைட் ஹவுஸ் (காரிடார் 4) மற்றும் மாதவரம் டூ சோழிங்கநல்லூர் (காரிடார் 5) ஆகிய மூன்று முக்கியப் பாதைகளை உள்ளடக்கியது. இதில் ஆற்காடு சாலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காரிடார் 4-ன் கீழ் வரும் பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தை முதலில் 2025 டிசம்பருக்குள் திறக்கத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், தற்போதைய முதலாம் கட்ட மெட்ரோ நெட்வொர்க்குடன் இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், வடபழனி நிலையம் வரை பணிகளை நீட்டித்து பிப்ரவரி மாதத்திற்குள் திறக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) சில நிபந்தனைகளுடன் முதற்கட்ட ஒப்புதலை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மே மாத இறுதி வாரத்தில் தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையகத்தின் (CCRS) ஐந்தாவது விரிவான ஆய்வுக்குப் பிறகு, போரூர் முதல் வடபழனி வரையிலான வழித்தடத்திற்கும் வேகக் கட்டுப்பாடுகளுடன் கூடிய இறுதித் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இந்த வழித்தடத்தில் சேவை துவங்கப்படாமல் இருக்கும் காரணத்தால் பொறுமை இழந்த சென்னை மக்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கட்டுமான பணிகள் முடிந்து 4 மாதம் ஆனது, சேவை துவங்குவதற்கான ஒப்புதல் கொடுத்து கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆனது. மெட்ரோ நிர்வாகத்திற்குத் தற்போது கிடைத்துள்ள புதிய அனுமதியின்படி, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.6 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் ரயில்களின் இயக்க வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரிலிருந்து 40 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்த முடியும். இந்த 14.6 கி.மீ தூரப் பாதையில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய 10 நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். ஆனால், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு மற்றும் சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்களின் உள்கட்டமைப்பு மற்றும் டிக்கெட் வழங்கும் இயந்திரப் பணிகள் இன்னும் முழுமையடையாததால், போரூர் சந்திப்பைத் தாண்டியவுடன் ரயில்கள் இந்த 6 நிலையங்களிலும் நிற்காமல் நேரடியாக வடபழனி நிலையத்திற்குச் சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி - வடபழனி வழித்தடம் திறப்பிற்குத் தயாராக உள்ள நிலையில், இதன் தொடர்ச்சியாக உள்ள வடபழனி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 10.3 கி.மீ நீளமுள்ள அடுத்த கட்டப் பாதையின் பணிகளும் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன. இதில் மேம்பாலக் கட்டமைப்புகள் மற்றும் சிக்கலான நிலத்தடிச் சுரங்கப் பாதைகள் என இருவேறு பிரிவுகளாகப் பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வடபழனி முதல் பனகல் பூங்கா வரையிலான 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடிச் சுரங்கப் பாதைக்கான (Underground Segment) பணிகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தியாகராய நகர் பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது பிளாட்பார்ம் லெவல் வரை எட்டியுள்ளன. மேலும், வரும் ஜூலை 2026-க்குள் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பனகல் பூங்கா வரையிலான பாதையில் தண்டவாளங்கள் அமைக்கும் (Track-laying) பணிகள் தொடங்கப்படவுள்ளன. வடாற்காடு மற்றும் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, போரூர் பகுதிகளில் இருந்து தினசரி சென்னை நகருக்குள் வேலைக்காக வரும் லட்சக்கணக்கான நடுத்தர மக்கள், வடபழனி மெட்ரோ நிலையத்தின் புதிய 'ஸ்கைவாக்' (Skywalk) இணைப்புப் பாலம் மூலம் முதலாம் கட்ட மெட்ரோ பாதையோடு எளிதாக இணைய முடியும். அனைத்து அனுமதிகளும் கையில் உள்ள சூழலில், விஜய் தலைமையிலான அரசு விரைவில் இவ்வழித்தடத்தில் மெட்ரோ சேவைகளைத் தொடங்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.4 மாதங்களில் என்ன நடந்தது?
10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ
வடபழனி டூ லைட் ஹவுஸ் அப்டேட்