3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங்

  • சென்னை: நகரின் போக்குவரத்து அமைப்பை முழுமையாக மாற்றி அமைக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தற்போது இரண்டாம் கட்டத் திட்டத்தை வேகப்படுத்தி வருகிறது. பயணம் மட்டுமல்ல, அன்றாட அத்தியாவசியத் தேவைகள், வணிகம் மற்றும் அலுவலகப் பணிகளை ஒரே இடத்தில் முடிக்கும் வசதியை உருவாக்கும் புதிய மெகா திட்டத்தை CMRL செயல்படுத்தி வருகிறது.

    Advertisement

    இந்த ஒருங்கிணைந்த சொத்து மேம்பாட்டுத் திட்டம் (Integrated Property Development) சென்னையின் முக்கிய பகுதிகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் அமையும் 13 முக்கிய சுரங்கப்பாதை நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளுடன் சில்லறை வர்த்தகம், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலக இடங்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மொத்தம் 33,486 சதுர மீட்டர் (சுமார் 3.6 லட்சம் சதுர அடி) பரப்பளவில் இந்த வணிக வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் மெட்ரோ பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிதாக அணுகக்கூடிய வணிக மையங்களாக இந்த நிலையங்கள் மாறும்.

    காரிடார் 3 மற்றும் காரிடார் 4 வழித்தடங்களில் உள்ள நிலையங்களில் இந்த மேம்பாட்டுப் பணிகள் முதன்மையாகக் கவனம் செலுத்தப்படுகின்றன. CMRL இதற்காக விரிவான வடிவமைப்பு ஆலோசகர்களை (Detailed Design Consultants) நியமிக்க இரண்டு முக்கிய டெண்டர்களை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், நிலையங்களின் நுழைவாயில்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, பயணிகள் லிஃப்ட், எஸ்கலேட்டர் பகுதிகளுக்குச் செல்லும் வழியிலேயே வணிக அலகுகளை அணுக முடியும் என்பதாகும்.

    Advertisement

    எந்தெந்த நிலையங்களில் இந்த வசதி?

    காரிடார்-3: சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, நுங்கம்பாக்கம், டாக்டர் ஆர்.கே. சாலை, அடையாறு பணிமனை ஆகியவை.

    காரிடார்-4: கச்சேரி ரோடு, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் ரோடு, போட் கிளப், நந்தனம் ஆகியவை.
    ஒவ்வொரு நிலையத்தின் இடப்பரப்பு மற்றும் தேவையைப் பொறுத்து Ground +1 முதல் Ground +6 வரை மாடி கட்டிடங்கள் எழுப்பப்படும். தரைத்தளம் மற்றும் கீழ்தளங்களில் சில்லறை கடைகள், உணவகங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் அமையும். மேல் தளங்களில் பெருநிறுவன அலுவலகங்கள், வணிக இடங்கள் உருவாக்கப்படும். உதாரணமாக அடையாறு பணிமனை நிலையத்தில் நுழைவாயிலுக்கு அருகே 546.52 சதுர மீட்டர் சில்லறை வர்த்தகப் பகுதி திட்டமிடப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிட வசதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல நிலையங்களில் கார், இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

    Advertisement

    CMRL-இன் டெண்டர் ஆவணங்களின்படி, இந்த வணிகக் கட்டிடங்கள் நிலையத்தின் நுழைவு அமைப்புகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும். நடைபாதைகள், லாபிகள் ஆகியவற்றைச் சுற்றி வணிக அலகுகள் அமையும். இதனால் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஒரு ஸ்டாப் சொல்யூஷன் உருவாகும்.

    ஏற்கனவே மாதவரம் ஹை ரோடு, செம்பியம், அயனாவாரம், ஓட்டேரி, பெரம்பூர், புரசைவாக்கம், திருமயிலை உள்ளிட்ட நிலையங்களுக்கும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நிபுணர்கள் இத்திட்டத்தை வரவேற்கின்றனர். "மெட்ரோ நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை மட்டும் நம்பாமல் Non-Fare Revenue ஈட்ட இது அவசியம். ஆனால் சுற்றுப்புற குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல், போதுமான பார்க்கிங் வசதியுடன் திட்டமிட வேண்டும்" என்கின்றனர்.

    Advertisement

    CMRL-இன் முன்னாள் இயக்குநர் ஆர். ராமநாதன், "இயக்கச் செலவுகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தலுக்கு இந்த சொத்து மேம்பாடு முக்கியம். இரண்டாம் கட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு உயரும். அதனால் இந்த வணிக இடங்களுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தத் திட்டம் சென்னையின் நகர்ப்புற வளர்ச்சியை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும். போக்குவரத்து, வணிகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சென்னையை உலகத் தர நகரமாக மாற்றும் முக்கிய அங்கமாக இது அமையும். CMRL-இன் இந்த முயற்சி பயணிகளுக்கு வசதியான, சுலபமான நகர வாழ்க்கையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chennai Metro Phase 2 Revolution: 3.6 Lakh Sq Ft Commercial Hubs at 13 Stations to Transform Urban Mobility & Business