Metro: பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ பணிகள் முடிந்தும் இன்னும் ரயில் சேவை தொடங்காதது ஏன்?

  • சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆவது கட்டமான பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    சென்னை வாசிகளின் நீண்ட நாள் கனவான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதி, எந்நேரமும் மக்கள் பயன்பாட்டிற்கு வரத் தயாராகிவிட்டது. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.6 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடத்தில், எப்போது வேண்டுமானாலும் பொதுப் போக்குவரத்தைத் தொடங்கலாம் எனத் தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    வேகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ரயில்களை இயக்குவதற்கான இறுதி ஒப்புதல் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்துவிட்டதால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) இந்த வழித்தடத்திற்குச் சில நிபந்தனைகளுடன் தற்காலிக அனுமதியை மட்டுமே தந்திருந்தார். இதனால், பூந்தமல்லி - போரூர் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என்ற சூழல் இருந்தது.

    ஆனால், தற்போது நிபந்தனைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு முழு அனுமதி கிடைத்துள்ளதால், இனி 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வழியமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CCRS) குழுவினர் கடந்த மே 23, 24 ஆகிய தேதிகளில் இந்த தடத்தில் நேரில் வந்து 5-வது பாதுகாப்பு ஆய்வை நடத்தினர். ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் என அனைத்தையும் சோதித்துப் பார்த்து அவர்கள் கொடுத்த திருப்திகரமான அறிக்கையின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இறுதி அனுமதி வழங்கப்பட்டது.

    "தற்போது பூந்தமல்லி - போரூர் இடையே எவ்வித வேகக் கட்டுப்பாடும் இல்லை. அதேபோல, போரூர் முதல் வடபழனி வரையிலான தடத்தில் ரயில்களின் வேகம் மணிக்கு 25 கி.மீட்டரிலிருந்து 40 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட திட்டத்தின்படி, இந்த ஒட்டுமொத்த தடத்தில் ரயில்கள் சராசரியாக மணிக்கு 32 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்."

    Advertisement

    ரயில்கள் எங்கு நிற்கும்?

    மொத்தம் 118.9 கி.மீ நீளமுள்ள இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்தடத்தில் இந்த பூந்தமல்லி - வடபழனி தடம் அமைந்துள்ளது. இதில் ரயில்கள் நிற்கும் நிலையங்கள் விபரம் இதோ:

    பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், காரஞ்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய ஸ்டேஷன்களில் ரயில்கள் வழக்கம்போல் நின்று செல்லும்.

    அடுத்த ஸ்டாப் வடபழனி தான் (நேரடி சேவை): போரூர் சந்திப்பைத் தாண்டியதும், ரயில்கள் இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாக வடபழனிக்குச் சென்றுவிடும்.

    காரணம் என்ன?

    ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிடங்கு மற்றும் சாலிகிராமம் ஆகிய இடைப்பட்ட 6 நிலையங்களின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததே இதற்குக் காரணம்.

    Advertisement

    இரு அடுக்கு மேம்பாலப் பாதையில் (Double-decker corridor) 26 மேற்கூரை அடுக்குகளைக் கட்டி முடித்த பின்னரே வடபழனி நிலையத்தை இயக்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆணையம் முன்னரே நிபந்தனை விதித்திருந்தது. அந்தப் பணிகள் மிக வேகமாக முடிக்கப்பட்டு, கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையமும் (SERC) அதை ஆய்வு செய்து சான்றளித்துள்ளது.

    CCRS-ன் முக்கிய அறிவுரை:
    தற்போது இடைக்கால அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விடுபட்ட 6 நிலையங்களின் (ஆலப்பாக்கம் முதல் வடபழனி வரை) கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான், இந்த வழித்தடத்திற்கான நிரந்தர அங்கீகாரத்திற்கு (Regular Authorization) மெட்ரோ நிறுவனம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    Advertisement

    பூந்தமல்லி - வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். ஏனெனில் பனிமலர், சவீதா, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், மீனாட்சி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அது போல் வடபழனியில் ஃபோரம் மால் வணிக வளாகமும், மியாட், மலர், சிம்ஸ், எஸ்ஆர்எம்சி போரூர் உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளும் உள்ளன.

    இதனால் இந்த மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பூந்தமல்லி மெட்ரோ தொடங்குவதற்கு எல்லாமே ரெடியாக இருக்கும் போதிலும் மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது என்பது குறித்து தேதி அறிவிக்கப்படவில்லை. இது குறித்து மெட்ரோ அதிகாரிகளிடம் கேட்ட போது பூந்தமல்லி- போரூர் வரையில் உள்ள 10 ரயில்நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் ஆலப்பாக்கம் டூ சாலிகிராமம் வரை இடைப்பட்ட 6 ரயில் நிலையங்களில் பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிந்துவிட்டதும் ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

    பாதுகாப்புச் சோதனைகள் அனைத்தும் பாஸாகி, சிக்னலும் கிடைத்துவிட்டதால், சென்னை மேற்குப் பகுதி மக்களின் பயண நேரத்தைக் குறைக்கப் போகும் இந்த "பூந்தமல்லி - வடபழனி" மெட்ரோ சேவை, எந்த நொடியும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chennai Metro Phase 2: With construction work on the Poonamallee–Vadapalani corridor completed, questions are rising over when the metro service will officially open for public use.