சென்னையில் MTC பேருந்தில் 30 விநாடிகளில் அரங்கேறிய திருட்டு.. இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

  • சென்னை: சென்னையில் MTC பேருந்தில் வெறும் 30 - 40 வினாடிகளில் அரங்கேறிய செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து செல்போன்களை இழந்த இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவரின் பையில் இருந்து, வெறும் 30 முதல் 40 வினாடிகளுக்குள் 2 செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். MTC பஸ்களில் பயணிப்பவர்கள் இனி உஷாராக இருக்குமாறு அந்த இளம்பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Advertisement

    அந்த வீடியோவில் பேசிய இளம்பெண், "நான் கே.கே. நகர் ESI பேருந்து நிறுத்தத்தில் இருந்து 17B எண் கொண்ட MTC பேருந்தில் ஏறினேன். எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகே இறங்க வேண்டும். பேருந்தில் என் அருகில் அமர்ந்து பயணித்த 60 வயதைக் கடந்த பெண் ஒருவர் என்னிடம் மிகவும் இயல்பாகப் பேசினார்.

    கடலை வேண்டுமா, குடிக்கத் தண்ணீர் இருக்கிறதா, பவர் பேங்க் இருக்கிறதா என்று கேட்டார். எங்கு இறங்க வேண்டும் என்றெல்லாம் விசாரித்தார். என் போனை வாங்கிப் பேசிவிட்டு தந்தார். வழக்கமாகப் பேருந்தில் செல்லும்போது 'ஹெட்போன்' அணிந்துகொண்டு யாருடனும் பேசாமல் தான் செல்வேன். ஆனால், அவர் வயதானவர் என்பதால் இயல்பாக மனதை விட்டுப் பேசுகிறார் என நினைத்தேன். அதுவே எனக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துவதற்காக என்பது அப்போது தெரியவில்லை.

    Advertisement

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் வரை என் பையில் போன் இருந்தது. அந்த பாட்டி WCC நிறுத்தம் அருகே இறங்கிவிட்டார். நான் அதன் பிறகு எழுந்துவிட்டேன். அதற்கு அடுத்த நிறுத்தம் வருவதற்க்குள், என் கண்ணில் ஏதோ விழுந்ததால் கண்ணைக் கசக்கிக் கொண்டு என் ஃப்ரெண்ட் கையைப் பிடித்துக்கொண்டிருந்தேன். அந்த கேப்பில் தான் எனது 2 செல்போன்களும் திருடப்பட்டுள்ளன.

    எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலக நிறுத்தத்தில் இறங்கும்போது பார்த்தபோது, பையைக் கிழித்து அதிலிருந்த ஓட்டை வழியாக எனது இரண்டு செல்போன்களும் திருடப்பட்டிருந்தன. வெறும் 30 முதல் 40 வினாடிகளுக்குள் இந்தத் திருட்டு நடந்துள்ளது. அந்தப் பாட்டி எனது பையைக் கிழித்துவிட்டு இறங்கி இருக்கவேண்டும். அந்தப் பாட்டியுடன் வந்தவர்கள் யாராவது எனது செல்போன்களை திருடி இருக்கலாம் என சந்தேகம் வருகிறது.

    Advertisement

    சினிமா படங்களில் மட்டுமே பார்த்த இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நேரடியாக நடந்த பிறகு தான் இப்படி ஒரு திருட்டு இருப்பதையே புரிந்துகொள்ள முடிந்தது. ரூ. 60,000 மதிப்பிலான போன்கள் திருடுபோய்விட்டன. சென்னை போன்ற மாநகரங்களில் MTC பேருந்துகளில் தினமும் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    A shocking video released by a young woman regarding the theft of mobile phones on an MTC bus in Chennai—an incident that unfolded in just 30 to 40 seconds—has caused a stir.