ஒவ்வொரு துறையா சரியாகுது! சென்னை மாநகராட்சி ஓபன் டெண்டர் முறையால்.. 25% குறைந்த செலவுகள்!

  • சென்னை: சென்னை மாநகராட்சியில் (GCC) சிறிய அளவிலான சிவிக் எனப்படும் உள்ளாட்சிப் பணிகளுக்கும் இனி பொதுவான போட்டி ஏல முறை (Competitive Bidding) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் பேசி முன்கூட்டியே விலையை நிர்ணயம் செய்யும் 'ப்ரீ-பிக்ஸிங்' (Pre-fixing) முறையும், லஞ்சப் புகார்களும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

    Advertisement

    இந்த புதிய மாற்றத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சியின் திட்டச் செலவுகள் சுமார் 25% முதல் 30% வரை கணிசமாகக் குறைந்துள்ளன. இது வரி செலுத்தும் பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் டிவிகே (TVK) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) மூலம் பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான இந்தத் துறையின் முதல் முக்கிய வழிகாட்டுதலே, அனைத்து வகையான டெண்டர்களுக்கும் திறந்தவெளி ஏல முறையை (Open Bidding) அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.

    இதற்கு முன்பு, அவசரத் தேவைகளைக் காரணம் காட்டி, ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே டெண்டர்களைத் திறந்து வைத்து, குறிப்பிட்ட உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாகப் பணிகள் ஒதுக்கப்பட்டன. அத்தகைய 'லிமிட்டெட் டெண்டர்' முறைகளுக்கு தற்போது முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    போட்டி அதிகரிப்பால் குறைந்த திட்டச் செலவு

    மாநகராட்சியின் பேருந்து வழித்தடச் சாலைகள் துறை அண்மையில் பல்வேறு பகுதிகளில் சாலை வெட்டுக்களைச் சீரமைக்கும் (Road-cut restoration) பணிகளுக்காகப் பல டெண்டர்களை வெளியிட்டது. இதில் சென்னை மாநகராட்சி எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த தொகைக்கு ஒப்பந்ததாரர்கள் புள்ளிகளைப் (Quotes) பதிவு செய்துள்ளனர்.

    உதாரணமாக, அம்பத்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்படவிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைச் சீரமைப்புப் பணிக்கு ஒன்பது ஒப்பந்ததாரர்கள் போட்டியிட்டனர். இதில் ஒருவர் மட்டுமே அரசு மதிப்பீட்டை விட 5% அதிகமாகக் கோரியிருந்தார். ஆனால், மற்ற எட்டு ஒப்பந்ததாரர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு குறைவான தொகையைக் குறிப்பிட்டதால், இறுதியாக அந்தத் திட்டத்தின் மதிப்பு வெறும் 17 லட்சம் ரூபாயாகக் குறைந்தது.

    Advertisement

    இதேபோல், தண்டையார்பேட்டையில் நடைபெற்ற 30 லட்சம் ரூபாய்க்கும் அதிமான மதிப்பிலான மற்றொரு சாலைப் பணிக்கு 10 ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்தனர். அங்கும் அரசு நிர்ணயித்த தொகையை விட 25% வரை குறைவான விலைக்குப் புள்ளிகள் கோரப்பட்டன. கடந்த சில நாட்களில் மட்டும் சென்னை மாநகராட்சி இது போன்ற சுமார் 150 சிறிய பணிகளுக்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தரக் கட்டுப்பாடு சவாலாக மாறுமா?

    இருப்பினும், இந்த அதீத விலை குறைப்பு திட்டங்களின் தரத்தைப் பாதிக்குமா என்ற கவலையும் எழுந்துள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட டெண்டருக்கு சில ஒப்பந்ததாரர்கள் அரசு மதிப்பீட்டை விட 36% வரை மிகக் குறைவாகக் கேட்டுள்ளதால், அந்த டெண்டரை மாநகராட்சி தற்போது மறுபரிசீலனை செய்து வருகிறது.

    Advertisement

    இது குறித்து சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ராமராவ் கூறுகையில், "முன்பெல்லாம் சிறிய பணிகளுக்கு அதிகாரிகள் அவசரம் என்று கூறி தங்களுக்குத் தெரிந்த ஒப்பந்ததாரர்களுக்குப் பணிகளை முன்கூட்டியே இறுதி செய்துவிடுவார்கள். அப்போது திட்ட மதிப்பீட்டை விட 10% அதிகமாகவே டெண்டர் கோரப்படும். ஆனால் இப்போது ஓப்பன் டெண்டர் என்பதால் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    வேலையைப் பிடிப்பதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைக்கிறார்கள். சில ஒப்பந்ததாரர்கள் 35% வரை மிக ஆக்ரோஷமாகக் விலையைக் குறைத்துக் கேட்கிறார்கள். எனவே, பணிகளின் தரம் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இப்போது மாநகராட்சி பொறியாளர்களுக்கு உள்ளது" என்றார்.

    Advertisement

    அரசு நிர்ணயித்த மதிப்பை விட 30% மற்றும் அதற்கும் குறைவாகக் கோரப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குறைந்த விலையில் பணிகளை முடிப்பதோடு மட்டுமன்றி, சாலைகளின் தரம் மற்றும் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருப்பதை உறுதி செய்ய பொறியாளர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஓப்பன் டெண்டர் வெளிப்படைத்தன்மை சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chennai News: GCC civic project costs plunge 25% after open bidding crackdown