சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னையின் முக்கிய சாலைகள்.. விஜய் கையில் மாஸ்டர் பிளான்!

  • சென்னை: சென்னை பெருநகரப் பகுதியின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கவும், தங்குதடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் மாநில அரசு பல்வேறு கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக, சென்னையின் மிக முக்கியமான இரு சாலைகளை மாதிரி நகர்ப்புற போக்குவரத்து பாதைகளாக மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

    Advertisement

    இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர்களை கும்டா அமைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது. இந்த மெகா திட்டத்தின் மூலம் ராஜீவ் காந்தி சாலை மற்றும் பல்லாவரம் - தொரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய இரண்டும் சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்புடன் முற்றிலும் புதுப்பொலிவு பெறவுள்ளன.

    Advertisement

    எந்தெந்த சாலைகள்? எவ்வளவு தொலைவு?

    இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னையின் பிரதான தகவல் தொழில்நுட்ப மையப் பகுதிகளை இணைக்கும் இரு முக்கிய சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான 25 கிலோமீட்டர் நீளமுள்ள ஓஎம்ஆர் சாலை முதல் வழித்தடமாக மேம்படுத்தப்பட உள்ளது. அதேபோல, பல்லாவரம் மேம்பாலம் முதல் தொரைப்பாக்கம் சந்திப்பு வரையிலான 7.4 கிலோமீட்டர் நீளமுள்ள பல்லாவரம் - தொரைப்பாக்கம் ரேடியல் சாலை இரண்டாவது வழித்தடமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

    இந்த இரு சாலைகளும் தினமும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய சாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    நான்கு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை

    இந்த இரு சாலைகளையும் உலக தரத்தில் மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க நிறுவனங்களுக்கு 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையில், சாலைகளின் அகலம் சீராக இருத்தல், குறைவான சிக்னல் அமைத்தல் மற்றும் Service Lanes உருவாக்குதல் ஆகியவை விரிவாகத் திட்டமிடப்படும்.

    மக்கள் நடந்து செல்ல பாதைகள், கடைகள் இருக்க இடம், வாகனங்களை பார்க் செய்ய இடங்கள் என்றும் தனி தனி பகுதிகள் அமைக்கப்படும்.

    நவீன வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு சிறப்பம்சங்கள்

    இந்த திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கென தனித் தடங்கள்மற்றும் நிழற்குடைகளுடன் கூடிய நிறுத்தங்கள் அமைக்கப்படும். நடப்பவர்கள் பாதுகாப்பாகச் செல்ல அகலமான நடைபாதைகள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான தனிப் பாதைகள், மற்றும் முறையான வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

    Advertisement

    இதுமட்டுமன்றி, நவீன தெருவிளக்குகள், மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்காத வகையில் மேம்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால்கள் மற்றும் அனைத்து மின்சாரம், தொலைத்தொடர்பு கம்பிகளையும் பூமிக்கடியில் கொண்டு செல்வதற்கான பிரத்யேக Underground Utility Ducts இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சாலைகளை அடிக்கடி தோண்டும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

    மெட்ரோ ரயில் பணிகளுக்குப் பின் சீரமைப்பு

    தற்போது ஓஎம்ஆர் மற்றும் பிடிஆர் சாலைகளில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்த சாலைச் சீரமைப்புப் பணிகள் நேரடியாகத் தொடங்கப்படும்.

    Advertisement

    மெட்ரோ பணிகள் முடிவடைந்ததும், இந்த மாதிரி சாலை அமைக்கும் பணிகள் சுமார் 6 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் விரைந்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் அதே காலகட்டத்தில், இந்த இரு முக்கிய சாலைகளும் உலகத் தரம் வாய்ந்த தோற்றத்துடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்திட்டம் முழுமையடையும் போது, தென் சென்னையின் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைவதோடு வாகன ஓட்டிகளுக்குப் பாதுகாப்பான, நவீனப் பயணச் சூழல் உருவாகும்.

    English Summary

    Chennai OMR & PTR Roads to Get Complete World-Class Makeover