சென்னையில் கமிஷ்னரின் ரகசிய ஆபரேஷன்.. தூக்கப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகள்.. சினிமா பாணியில் அதிரடி

  • சென்னை: காவல்துறையில் லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகரக் காவல் துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பணியின் போது லஞ்சம் கேட்டது மற்றும் வாங்கியது தொடர்பாக நான்கு காவலர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் என மொத்தம் 5 பேரை சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    காவல்துறையில் ஊழலை முற்றிலும் ஒழித்து, வெளிப்படையான மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் சென்னை பெருநகரக் காவல் துறை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் காவல்துறையினருக்கு எதிரான லஞ்சப் புகார்களைக் கையாள்வதற்காகத் பிரத்யேக ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.

    Advertisement

    சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து எஸ்.ஐ சஸ்பெண்ட்

    போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஒரு வாகன ஓட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை மீண்டும் ஒப்படைக்க, சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் செல்வராஜ் ரூ.500 லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவர் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    வாட்ஸ்அப் ஆடியோ ஆதாரத்தால் சிக்கிய கண்காணிப்பாளர்

    மற்றொரு சம்பவத்தில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் பணிக்கால கோப்புகளை விரைந்து முடித்துத் தருவதற்குப் பணம் கேட்டு நிர்ப்பந்தித்ததாக, சென்னை காவல் பணியாளர் ஓய்வூதியப் பிரிவில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் சக்திவேல் என்பவர் மீது புகார் எழுந்தது.

    Advertisement

    பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரி அளித்த வாட்ஸ்அப் ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் துறை ரீதியான ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் சக்திவேல் லஞ்சம் கோரியது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இதே போன்ற லஞ்சப் புகார்களில் தொடர்பிலிருந்த மற்ற மூன்று காவலர்களும் தீவிர விசாரணைக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    துறை ரீதியான நடவடிக்கையுடன் குற்றவியல் வழக்கும் பாயும்: காவல் ஆணையர் எச்சரிக்கை

    இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அனைத்து நிலைக் காவல் அதிகாரிகளுக்கும் திட்டவட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதோ அல்லது லஞ்சம் பெறுவதோ கண்டறியப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடுமையான குற்றவியல் வழக்குகள் பாயும் என்று அவர் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்களின் அன்றாடப் பணிகளுக்கான நிர்வாகச் செலவுகளுக்கு அரசே நிதி ஒதுக்கி வருவதால், காவல் நிலையச் செலவு என்ற பெயரில் யாரிடமும் பணம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

    பிரத்யேக உதவி எண் மற்றும் வாட்ஸ்அப் வசதி

    காவல்துறையினரின் லஞ்ச அத்துமீறல்களைக் களைய கூடுதல் துணை ஆணையர் தலைமையில் இயங்கும் சிறப்பு ஊழல் ஒழிப்புப் பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல்துறையினரின் லஞ்சக் கோரிக்கைகள் குறித்து அச்சமின்றிப் புகார் அளிக்க 78717 23000 என்ற பிரத்யேக உதவி மற்றும் வாட்ஸ்அப் எண் பயன்பாட்டில் உள்ளது.

    Advertisement

    புகாரளிக்கும் பொதுமக்களின் விவரங்கள் மற்றும் அடையாளம் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், பெறப்படும் அனைத்துப் புகார்கள் மீதும் உடனடி மற்றும் பாரபட்சமற்ற தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம் எனவும், லஞ்சம் கோரப்பட்டால் உடனடியாக ஊழல் ஒழிப்புப் பிரிவை அணுகுமாறும் ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English Summary

    Chennai Police Bribery Crackdown: Police Commissioner Amalraj Suspends 5 officials