சென்னை மெரினா கடற்கரைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு தடை! போலீஸார் குவிப்பு! பதற்றத்தில் Marina!

  • சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வருவதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் இளைஞர்கள் மெரினாவில் குவிய திட்டமிட்டுள்ளதால் இந்த முன்னேற்பாடு நடவடிக்கையை போலீஸார் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    நீட் தேர்வு முறைகேடு குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.

    Advertisement

    இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இளைஞர்களும் அங்கு திரள்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை கலைக்க முற்பட்டனர்.

    இந்த நிலையில் கரப்பான்பூச்சி கட்சியினருக்கு ஆதரவாக தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் 32 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்பினர் புதன்கிழமை திடீரென போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என கூறிய போலீஸார் அவர்களை கலைந்து போக சொன்னார்கள்.

    Advertisement

    ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை, சாலை மறியல் போராட்டம் செய்த போது அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். இதில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அது போல் மாநில கல்லூரி, நியூ கல்லூரி, உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். திநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் பாலன் இல்லத்திலும் 3ஆவது நாளாக கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுக்கும் நிலையில் இன்றைய தினம் இளைஞர்கள் மெரினாவில் கூடுவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து மெரினா கடற்கரைக்கு வந்த போலீஸார் அங்கு தடுப்புகளை அமைத்து வந்த பொதுமக்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

    அதே வேளையில் இன்று மாலை அல்லது நாளை வாருங்கள் என சொல்லி அனுப்பியிருந்தனர். இதனால் கடற்கரைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    2017ஆம் ஆண்டு மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஆகிவிடக் கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா அருகே 2 துணை ஆணையர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினா சர்வீஸ் சாலை, மெரினா மணற்பரப்பு, ரயில் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.