சென்னை: சாலை விதிகளை மீறாத நாள் என்ற தலைப்பில் சென்னையில் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக பாரபட்சம் இன்றி கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வாகன விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக உள்ளது. பைக்குகளில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். கார்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து விதிமுறைகள் இருந்தாலும் இதை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
விபத்துகளின் போது உயிரிழப்பு ஏற்படுவதற்கு இத்தகைய விதிமீறல்களே பிரதானமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபடுகிறார்கள். அதிலும் தலைநகர் சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார், விதி மீறும் வாகன ஒட்டிகளை கண்காணித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள். ஆனாலும் வாகன ஓட்டிகளே ரொம்ப உஷாராக இருக்கிறோம் என்ற பெயரில் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, எஸ்கேப் ஆகிவிடுவதையும் பார்க்க முடிகிறது. எனவேதான், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது, போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் சென்னையில் இன்று நாள் முழுவதும் ஸ்பெஷல் ரெய்டு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். சாலை விதிகளை மீறாத நாள் என்ற தலைப்பில் இன்று தீவிர வாகன சோதனை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் இன்று நாள் முழுவதும் வாகன சோதனை நடத்த உள்ளனர். விதிகளை மீறி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது தயவுதாட்சண்யம் இன்றி உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். முக்கியமான 10 போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. பைக்கில் வரும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும். சிக்னலை மீறக்கூடாது. அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது. கார்களில் செல்பவர்கள் 'சீட் பெல்ட்' அணியவேண்டும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது என்பன போன்ற விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்து இருக்கிறார்கள். சமீப காலமாக சனிக்கிழமை நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தவும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனை தடுக்கு முயற்சியாகவும் இன்று வாகன போக்குவரத்து விதிகளை மீறாத நாளாக கடைபிடித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவது தங்கள் உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் பாதுகாப்பானது என்பதால் வாகன ஓட்டிகள் எப்போதுமே விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. போலீசார் ரெய்டுக்கு மட்டும் பயந்து விதிகளை கடைபிடிக்காமல் எப்போதும் முறையாக விதிகளை பின்பற்றினால் விபத்து இல்லாத தமிழகம் என்ற கனவு நிச்சயம் மெய்ப்படும் என்பதால், வாகன ஒட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். போலீசாரும் இதனை உரிய முறையில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.சென்னையில் இன்று ஸ்பெஷல் ரெய்டு
உடனடியாக வழக்கு பதிவு
அதிரடி நடவடிக்கையில் போலீசார்
பொதுமக்கள் எதிர்பார்ப்பு