அமைந்தகரையில் 8 மணி நேரம் பவர் கட்! அறிவிக்கப்படாத மின்வெட்டால் தவிக்கும் சென்னை

  • சென்னை: சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை டென்ஷனாக்கியிருக்கிறது. அதிலும் நேற்று சென்னை அமைந்தக்கரையில் 8 மணி நேரம் பவர் கட் ஆகியிருக்கிறது.

    Advertisement

    அறிவிக்கப்படாத மின்வெட்டால் முதியோர், நோயாளிகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் UPS வசதி கிடையாது என்பதால்.. இந்த பவர் கட்டால் பாதிக்கப்படுபவர்கள் சாமானிய மக்களாகவே இருக்கின்றனர்.

    Advertisement

    நேற்று, சென்னை அமைந்தக்கரை முனிரத்தினம் தெருவில் மின்னழுத்த மின்சாரம் வந்திருக்கிறது. இதன் காரணமாக செல்போன் அடாப்டர், வைஃபை அடாப்டர், மிக்சி உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்து சிதறியிருக்கின்றன. மறுபுறம் நேற்று காலையிலிருந்தே இந்த பகுதியில் பவர் கட் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் கொடுக்கப்படாததால் மக்கள் தொடர்ந்து மின்வாரியத்திற்கு போன் அடித்து புகார் அளித்தனர். இதையடுத்து 2 ஊழியர்கள் வந்து மின் இணைப்பை சரி செய்ய முயன்றனர். ஆனால், பூமிக்கடியில் செல்லும் புதைவட கம்பிகள் எரிந்ததால் உடனடியாக மின்தடையை சரிய செய்ய முடியவில்லை.

    Advertisement

    புதைவட கம்பி எரிந்து போனால், அந்த பிரச்சனையை சரி செய்ய குறைந்தது 8-10 ஊழியர்கள் தேவை. ஆனால், மின்சாரத்துறையில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லாததால், வெறும் 2 பேரை மட்டும் வைத்து வேலை பார்த்திருக்கிறது மின்வாரியம். இதனால் 8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மின் இணைப்பை வழங்க முடியவில்லை.

    லீவு நாட்களில்தான் நிம்மதியாக தூங்க முடியும்! ஆனால், இப்படி லீவு நாட்களிலும் பவர் கட் செய்து உயிரை வாங்குகிறார்களே என்று அமைந்தகரை மக்கள் புலம்பியுள்ளனர். சென்னை பெரம்பூரிலும் சில நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை 8.30 கட் ஆன மின்சாரம், அரை மணி நேரம் கழித்துதான் வந்திருக்கிறது. அரை மணி நேரம் என்றால் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளலாம். ஆனால், இதுவே ரெகுலராக இருந்தால் எப்படி? என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதியிலே இந்த நிலைமையா என்றும் ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    கடந்த வாரம் தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் 40 நிமிடங்களாக 3-4 சுற்றுகள் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. போதுமான மின்சாரம் இல்லாததாலும் வெளியிலிருந்து மின்சாரம் வாங்காததாலும் மின் வெட்டு ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்ய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Chennai power crisis: Unannounced power cuts in Chennai have left residents frustrated. Notably, the Aminjikarai area experienced an eight-hour power outage yesterday.