3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?

  • சென்னை: திமுக பற்றி உண்மைக்கு புறம்பாக அவதூறு வகையில் பேசியதாக கூறி சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வக்கீல் நோட்டீஸின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பல்லவி. நேற்று முன்தினம் இவருக்கும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

    Advertisement

    திருவிக நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் புதிய கட்டடம் திறக்கும் விழாவில் ரிப்பன் வெட்டுவது மற்றும் குத்து விளக்கு ஏற்றுவது உள்ளிட்ட விவகாரத்தில் சென்னை மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே பிரச்சனை வெடித்தது.

    மேயர் பிரியா தன்னை அவமானப்படுத்தியதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம்சாட்டினார். ஆனால் 'புரோட்டோகால் அடிப்படையில் தான் செயல்பட்டேன். யாரையும் நான் அவமதிக்கவில்லை'' என்று மேயர் பிரியா விளக்கம் அளித்து வருகிறார். இந்த விவகாரம் தற்போது விவாதமாகி உள்ளது. இந்த விவாதம் அடங்குவதற்குள்ளாக தான் இன்னொரு விஷயத்தில் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு, திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    திமுகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ''சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசித்த வருபவர் நடராஜன். இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். அதோடு திமுகவில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் மூலமாக இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சென்னை கொளத்தூர் மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட மின்தடை பற்றி பேசி உள்ளீர்கள். அதில் திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளீர்கள்.

    Advertisement

    திமுகவை சேர்ந்தவர் தான் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதற்கு முக்கிய காரணம் என்றும், திமுகவை சேர்ந்தவர்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து மின்சாரத்தை தடை செய்வதாகவும் கூறி உள்ளீர்கள். ராயபுரம் தொகுதியில் திமுகவை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து மின்வெட்டு ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளீர்கள். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதோடு திமுகவினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டி உள்ளீர்கள். இதனால் 3 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

    தவெக ஆட்சியை பிடித்த பிறகு சென்னை மற்றும் பிற இடங்களில் அடிக்கடிமின்வெட்டு ஏற்பட்டது. இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ பல்லவி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவினர் தான் மின்வெட்டுக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    Advertisement

    ஊழியர்களுக்கு பணம் கொடுத்து தவெகவிற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திமுகவினர் மின்வெட்டை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில் திமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான சரவணன் சார்பில் தவெக எம்எல்ஏ பல்லவிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    English Summary

    DMK sent defamation notice to TVK MLA Pallavi: A legal notice has been sent to Pallavi, the TVK MLA for the Chennai Thiru.Vi.Ka. Nagar assembly constituency, alleging that she made defamatory and factually incorrect remarks about the DMK. The notice demands an unconditional apology within three days, stating that legal action will be initiated otherwise. Here is a look at the background of this legal notice.