சென்னை: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் சென்னைக்கு தலைவலியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெள்ள பாதிப்பை தடுக்கும் நோக்கில், மண்டல வாரியாக 15 நோடல் அதிகாரிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் நியமித்திருக்கிறார். இந்த அதிகாரிகள் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னர், காலையில் அனைத்து பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் இந்த உத்தரவில்.. சென்னை மாநகராட்சியின் 1-15 மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், அம்மா உணவகங்களில் உணவின் தரம், தூய்மை பணிகள் மற்றும் பொது பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அதிகாரிகள் தினமும் அலுவலக நேரம் தொடங்குவதற்கு முன்னர், காலை நேரத்தில் தூய்மை பணிகளை, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் மற்றும் தூய்மையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு எல்லாம் ஓகேதான். ஆனால் இந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்கும் என்று அரசு உறுதி கொடுக்குமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். 24 மணி நேரத்தில் 15-20 மி.மீ அளவுக்கு மழை பெய்தால் அதை தங்கும் வகையில்தான் சென்னை மாநகராட்சியின் கட்டுமானம் இருக்கிறது. இருப்பினும் கடந்த காலங்களில் மழையின் அளவு அதிகமாக இருந்ததால் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1-2ம் தேதிகளில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 34.5-44.5 செ.மீ வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால் திரும்பும் பக்கம் எல்லாம் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. அதேபோல 2023 டிச.3-4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலின்போது 24 மணி நேரத்தில் 40 செ.மீ வரை மழை பெய்தது. இதனால் சென்னையில் பரவலாக வெள்ளம் தேங்கியது. இப்படி இருக்கையில் இந்த ஆண்டு வெள்ளம் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கை கை கொடுக்குமா? அல்லது.. வெறும் உத்தரவாக நின்றுவிடுமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.