சென்னை: பிரபல பெண் தொகுப்பாளினி குறித்து அவதூறாக பேசியதாக நக்கீரன் இதழில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, புகாருக்கும் நடவடிக்கைக்கும் 8 மாத இடைவெளி ஏன்?, இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது என கூறியுள்ளது.
பிரபல வார இதழான நக்கீரனில் பணியாற்றி வருபவர் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ். பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டியும் கொடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தவர்.
பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் குறித்தும் அவருடன் பணியாற்றும் பெண் தொகுப்பாளினி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த பெண் பத்திரிகையாளர் தொகுப்பாளினி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று அதிரடியாக தாமோதரன் பிரகாஷை கைது செய்தனர் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தாமோதரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, புகாருக்கும் நடவடிக்கைக்கும் 8 மாத இடைவெளி ஏன்?, இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது என கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கு மேல் பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நக்கீரன் இதழ் வெளியிட்ட பல புலனாய்வு செய்திகளில் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் தாமோதரன் பிரகாஷ் அவர்கள் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் அவர்களின் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். கைது தொடர்பாக காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் ஒருவர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் தவறுகளை யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூட்யூபில் பேசியதற்காக எந்த வித முன் விசாணையுமின்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது. தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது." என கூறப்பட்டுள்ளது.