சென்னை: இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சொத்து வரி என்பது தனிநபர் அல்லது நிறுவனத்தின் சொத்துகள் மீது விதிக்கப்படும் வரி. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றிற்கு செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது.
சென்னையில் உள்ள குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் வணிக கட்டிட உரிமையாளர்கள் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி செலுத்தி வருகிறார்கள். முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த அக்டோபர் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். ரூ.5 ஆயிரத்திற்கு மிகாமல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி வருவாய் அதிகாரி தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக வராமல் இருக்கும் சொத்து வரி ரூ.300 கோடியாகும். இதில் ரூ.90 கோடிக்கு நீதிமன்ற வழக்கு உள்ளது. அதனால் எந்த மேல் நடவடிக்கையும் தற்போது எடுக்க முடியவில்லை. நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க அரசுக்கு தெரிவிக்க உள்ளோம். அரசின் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முதல் அரையாண்டில் ரூ.1,119 கோடி வசூல் ஆனது. முதலாம் அரையாண்டின் இறுதி நாளான செப்.30-ம் தேதி மட்டுமே சொத்து வரி ரூ.50.26 கோடி வசூல் ஆனது. நடப்பு ஆண்டுக்கான இலக்கு ரூ.1,250 கோடி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தர்மபுரி மக்களின் 85 ஆண்டு கால கனவு.. சென்னை ரயில் இணைப்புக்கு புதிய அப்டேட்.. ஆனால் ஒரு சிக்கல்