சென்னை: போன முறை ரூ.800 அளவில் சொத்து வரி கட்டியதாகவும், இந்த முறை எந்த அறிவிப்பும் இல்லாமல் ரூ.6,000 வரியாக கட்ட சொல்லி கேட்பதாகவும் சென்னை மக்கள் புலம்ப தொடங்கியிருக்கின்றனர். மாநகராட்சி தரப்பில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும், ஏன் கூடுதலாக வரி வசூலிக்கப்படுகிறது? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
ஒன் இந்தியா தமிழ் செய்தி ஊடகத்திடம் இது குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் பேசியதாவது, "இந்த வரி உயர்வு குறித்த விளக்க வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கு இருக்கிறது. ஆனால், வரி உயர்வு இல்லை என அரசு மொட்டையாக கூறியிருக்கிறது. இருப்பினும் மக்கள் தாங்கள் எதிர்கொண்டிருக்கும் வரி உயர்வு குறித்து தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த முறை ரூ.845 சொத்து வரியாக கட்டியதாகவும்.. இப்போது இத ரூ.6,440 ஆக உயர்ந்திருக்கிறது என்று மக்கள் பதிவிட்டிருப்பதை பார்க்க முடிகிறது. பொதுவாக இருப்பவர்கள் இப்படி அரசு மீது நேரடியாக குற்றம்சாட்ட வேண்டிய அவசியம் கிடையாது. 600-700% வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஏற்கெனவே மின் கட்டண விஷயத்தில் இப்படித்தான் செய்தார்கள். இதற்கு அரசு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்போது சொத்து வரி உயர்வுக்கு.. அப்படியெல்லாம் கிடையாது என்று கடந்து செல்கிறார்கள். ஊடகங்கள்தான் அரசை கேள்வி கேட்க வேண்டும். நாங்கள் கேள்வி எழுப்புவதால், திமுக திட்டமிட்டு கருத்து உருவாக்கத்தை செய்கிறது என்று சொல்லிவிடுவார்கள். மின் கட்டண குளறுபடிகள் குறித்து அரசு ஒப்புக்கொண்டாலும், அதை சரி செய்தார்களா? இல்லையா? சரி செய்யப்படவில்லை எனில்.. அதை செய்யும் வரை மக்களால் காத்திருக்க முடியாது. கட்டணம் செலுத்தப்படவில்லை எனில் கனெக்ஷனை பிடிங்கிவிட்டுவிடுவார்கள். சொத்துவரிக்கும் இதே நிலைதானே! இவர்கள் போட்டுக்கொடுத்த பில்லை கட்டவில்லை எனில், குடிநீர், கழிவுநீர் இணைப்பை துண்டித்துவிடுவார்களே! இந்த அரசு செயல்படும் விதமே வினோதமாக இருக்கிறது. சொத்து வரி மறுமதிப்பீடுதான் செய்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் கொடுத்திருக்கிறார். மறுமதிப்பீடு செய்தால் ஏன் வரி உயர வேண்டும்? அதே அளவில்தானே இருக்க வேண்டும்? கேட்டால் மேல்முறையீடு செல்லுங்கள் என்று கூறுகின்றனர். சாமானிய மக்களால் மேல்முறையீடு போக முடியுமா? அன்றாட தொழிலாளி வேலைக்கு செல்வாரா? மேல்முறையீடுக்கு செல்வாரா? மேல் முறையீடு என்பது எவ்வளவு கொடுமையானது என்று எங்களுக்குதான் தெரியும். வரி உயர்வால் கடைகளின் வாடகை அதிகமாகும். இதை சமாளிக்க பெட்டிக்கடை, சிறிய உணவகங்கள் தங்கள் உணவு பொருட்களின் விலையை ஏற்றுவார்கள். இது சாமானிய மக்களின் தலையில்தான் வந்து விடியும். இந்த அரசுக்கு எப்படி வருவாயை அதிகரிப்பது என்று தெரியவில்லை. இப்படி அடாவடியாக வசூல் செய்தாவது கஜானாவை நிரப்ப வேண்டும் என்று பார்க்கிறார்கள்" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.