சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக, கொல்கத்தா, டெல்லி, கொழும்புவிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தன. இதனால் பயணிகள் லேசாக அச்சமடைந்தனர்.
கொல்கத்தாவிலிருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கும், 194 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோவைக்கும் அவசரமாக திருப்பிவிடப்பட்டன.
டெல்லி, கொழும்பு, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இதர 8 விமானங்கள் தரையிறங்க அனுமதியின்றி வானிலை வட்டமடித்தபடி காத்திருந்தன. பின்னர் வானிலை சீரானதையடுத்து அவை ஒவ்வொன்றாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. இந்த மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக 10 வருகை விமானங்கள் மற்றும் 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 22 விமானங்களின் சேவைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. நேற்று சென்னைக்கு மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையின் தாக்கம் இன்று காலையும் நீடித்ததால், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களால், சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை. அடுத்த 2 மணி நேரத்தை பொறுத்தவரை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தவிர இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வும் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.வானிலை அறிவிப்பு