சென்னை: சென்னையில் மாலை முதலே கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் குறுகிய நேரத்திலேயே 10 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக திருவொற்றியூர், பெரம்பூர், கோடம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக் காடாக மாறி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மாலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதி கனமழை பதிவாகி இருக்கிறது.
சென்னையில் கத்திவாக்கம், பாரிமுனை, திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 மணி நேரத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 26 செ.மீ, பாரிமுனை 25.5 செ.மீ., திருவொற்றியூர் 15 செ.மீ, தண்டையார்பேட்டை 10 செ.மீ., எண்ணூர் 9 செ.மீ., மணலி 9 செ.மீ,ம் மாதாவரம் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வடசென்னை பகுதிகளில் கனமழை பெய்ததால், அப்பகுதியுஇல் உள்ள சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதேபோல் வடசென்னை பகுதியில் இருந்த மேகங்கள் தென் சென்னை நோக்கியும் நகர்ந்து வருகின்றன. இதனால் மழை இன்னும் தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம், வானிலை ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர். மழை இன்னும் தீவிரம் அடையும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மழை தற்போது குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.