சென்னை: சென்னையில் பெருமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இன்னொரு பக்கம் மழையின் போது நீண்ட நேரம் இடியும், மின்னலும் வெட்டியது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் நேற்று மாலை 6.30 மணி முதலே பெருமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பாரிமுனையில் 27 செ.மீ. கத்திவாக்கம் 26 செ.மீ., திருவொற்றியூர் 19 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல் எண்ணூர் 17 செ.மீ., தண்டையார்பேட்டை 14 செ.மீ., ராயபுரம் 12 செ.மீ., மணலி புதுநகர் 11 செ.மீ., பேசின் பிரிட்ஜ் 10.2 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமழையின் போது நீண்ட நேரமாக இடி சத்தமும், மின்னல் வெளிச்சமும் வெட்டியது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. மின்னல் வெட்டிய போது அந்த பகுதியே பகலை போல் காட்சி அளித்தது. இடி சத்தமும் திகிலை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பண்டிகை கால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாசலிலேயே மழைநீர் வெள்ளம் போல் தேங்கி இருக்கிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதேபோல் வடசென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள தாழ்வான பகுதிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு பணிகளிலும், மழைநீரை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளிலையும் மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு செய்துள்ளார்.