6 மாத விஜய் ஆட்சியின் முதல் சோதனையே தோல்வி! டூல் கிட்டை இறக்கிய தவெக? திமுக மீது பழிபோட முடிவு?

  • சென்னை: சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழை, நகரின் பல முக்கியப் பகுதிகளை மீண்டும் வெள்ளக் காடாக மாறின. முக்கியமாக விஜய்யின் தொகுதியான பெரம்பூர், வேளச்சேரியில் உள்ள ராம் நகர், பாரிமுனை, அண்ணா சாலை, கிளாம்பாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கியப் போக்குவரத்து சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

    Advertisement

    மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும், வாகன ஓட்டிகள் சாலைகளில் சிக்கித் தவித்தும் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர்.

    Advertisement

    தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சியமைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு, ஆட்சிக்கு வந்த இந்த ஆறு மாதங்களில் மழை வெள்ளத்தைக் கையாள எந்தவொரு முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்பது இந்த ஒரே நாள் மழையிலேயே வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    முதல் தேர்விலேயே தோல்வியடைந்த தவெக அரசு

    பருவமழை தொடங்கும் முன்னரே மழைநீர் வடிகால்களைத் தூர்வாருவது, பம்பிங் மோட்டார்களை தயார் நிலையில் வைப்பது, அடைப்புகளை நீக்குவது போன்ற அடிப்படைக் களப்பணிகளை அரசு முடுக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால், களத்தில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பணிகளும் நடக்கவில்லை என்பதை நேற்றைய நிலைமை உணர்த்துகிறது.

    Advertisement

    வடசென்னையின் பல இடங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவானது உண்மைதான். ஆனால், ஒரு தலைநகரத்தின் நிர்வாகம் என்பது எதிர்பாராத இயற்கை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, வெள்ளத் தடுப்புத் திட்டங்களோ திட்டமிட்டு செயல்படுத்தப்படவில்லை. அரசு இயந்திரத்தை முன்கூட்டியே தயார்படுத்துவதில் புதிய தவெக அரசு முழுமையாகக் கோட்டைவிட்டுவிட்டது என்பதை மக்கள் நேரடியாகவே அனுபவித்து வருகின்றனர்.

    கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியின் உழைப்பு என்னவானது?

    கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், கடந்த சில ஆண்டுகளில் பெய்த மிகக் கடுமையான மழை மற்றும் புயல்களின் போதுகூட வெள்ளப் பாதிப்பை பெருமளவு கட்டுக்குள் வைத்திருந்தன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெள்ளத்தில் மிதந்த தி நகர், வேளச்சேரி போன்ற இடங்களில்கூட மழைநீர் தேங்காமல் உடனடியாக வடிந்ததை மக்கள் பார்த்தார்கள்.

    Advertisement

    ஆனால், அந்த கட்டமைப்புகளைப் முறையாகப் பராமரிப்பதற்கும், பருவமழைக்கு முன் தூர்வாரி தயார் நிலையில் வைப்பதற்கும் தவெக அரசு எந்தவொரு அக்கறையும் காட்டவில்லை. ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும், தங்களுக்குக் கிடைத்த நிர்வாக இயந்திரத்தை சரியாகப் பயன்படுத்தத் தவறியதே நேற்றைய வெள்ள பாதிப்புக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளது.

    இரட்டை வேடம் போடும் தவெக: எங்கும் அரசியல், எதிலும் தப்பியோட்டம்

    வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே களத்தில் நின்று நிவாரணப் பணிகளை வேகப்படுத்துவதை விட்டுவிட்டு, தவெக தரப்பினர் வழக்கம்போல முந்தைய திமுக அரசின் மீது பழிபோடும் போக்கையே கையாள்கின்றனர்.

    Advertisement

    எங்கெல்லாம் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் "கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு உருப்படியாக எந்த வேலையும் செய்யவில்லை; அதனால்தான் இந்த நிலைமை" என்று கூச்சலிடுகிறார்கள். அதேசமயம், கடந்த திமுக அரசு அமைத்த உயர்தர மழைநீர் வடிகால்கள் காரணமாக எந்தெந்தப் பகுதிகளில் மழைநீர் வடிந்து பாதிப்பு இல்லையோ, அங்கெல்லாம் "பார்த்தீர்களா, எங்கள் தவெக ஆட்சியின் சிறப்பான செயல்பாடு!" என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

    பாதிப்பு வந்தால் முந்தைய அரசு மீது பழி, பலன் கிடைத்தால் மட்டும் தாங்களே உரிமை கொண்டாடுவது என்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல, மிகவும் பொறுப்பற்ற அரசியல் அணுகுமுறையாகும். மக்கள் இந்த இரட்டை வேடத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.

    Advertisement

    விளம்பர ஆட்சிக்கு மக்கள் தரும் தீர்ப்பு

    ஆட்சி நிர்வாகம் என்பது மேடைகளில் முழங்குவது போலவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வது போலவோ எளிதானது அல்ல. பருவமழை போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க முறையான திட்டமிடலும், அதிகாரிகளை வழிநடத்தும் ஆளுமையும், களத்தில் நிற்கும் உழைப்பும் தேவை.

    வெறும் ஆறு மாதங்களிலேயே சென்னை மக்களை மீண்டும் வெள்ள அவதிக்குள் தள்ளியதன் மூலம், தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையை நிரூபித்துள்ளது. கடந்த அரசின் மீது குறை சொல்வதை நிறுத்திவிட்டு, இனியாவது போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், வரவிருக்கும் நாட்களுக்கு உரிய வடிகால் பணிகளை மேற்கொள்ளவும் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் கோபத்திற்கு அரசு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    English Summary

    Chennai Rains Expose TVK Govt: 6 Months in Power, Zero Groundwork and Total Flood Failure