சென்னை: சென்னை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கூவம் மற்றும் அடையாறு ஆறுகளைத் தூய்மைப்படுத்தி, மீட்டெடுக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கும் வகையில் உலகளாவிய டெண்டர் கோரப்பட உள்ளது.
சமீபத்தில் பட்ஜெட்டை சமர்ப்பித்து உரையாற்றிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், சென்னை மக்கள் நதிகளில் படகு சவாரி செய்யவும், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடவும், அனைத்து வயதினரும் சுத்தமான ஆற்றங்கரையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவும் ஏற்ற வகையில் இந்த ஆறுகள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, ஆற்றங்கரையில் வசதி வந்த குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்குவது, பாதுகாப்புச் சுவர்கள் கட்டுவது போன்ற பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை நதிக்கரை மேம்பாடு மற்றும் நதியின் நீர் தரத்தை உயர்த்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த உலகளாவிய டெண்டர் மூலம் தேர்வாகும் ஆலோசனைக் குழு, உலகின் பிற நாடுகளிலும் நகரங்களிலும் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட நதி சீரமைப்பு திட்டங்களை ஆய்வு செய்யும். அதனடிப்படையில், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுக்கும் வகையில் பிரதான பாதாள சாக்கடை குழாய்கள் அமைத்தல், பூங்காக்கள், நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் பாதைகள் மற்றும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். ஆற்றங்கரையில் வசித்து வந்த சுமார் 23,000 குடும்பங்கள் கூவம் பகுதியிலிருந்தும், 12,000 குடும்பங்கள் அடையாறு பகுதியிலிருந்தும் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது எஞ்சியுள்ள குறைந்த அளவிலான குடும்பங்களுக்கும் விரைவில் மாற்று வசதிகள் செய்து தரப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்படும். மாநிலத்தின் நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 2026-27 நிதியாண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.1,636 கோடி கூடுதலாகும். இந்த நிதியின் மூலம் அனைத்து மாநகராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவான நவீன வீதிகள், தனியான நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், பாதுகாப்பான பள்ளி மண்டலங்கள் மற்றும் நவீன எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களை விநியோக நிலையங்களுடன் இணைக்கும் வகையில் ரூ.3,108 கோடி மதிப்பில் 'ரிங் மேன் பைப்லைன்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2031-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவடையும். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சீராக்கவும் 'இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' (Intelligent Transport Management System) அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையின் முக்கிய 20 இடங்களில் நவீன 'ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மென்ட்' முறை கொண்டுவரப்படும். கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் பெரும் சவாலாகவே இருந்து வந்தன. தற்போது பன்னாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் தொடங்கப்படும் இந்த புதிய முயற்சி, சென்னையின் அடையாளமாக விளங்கும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளுக்கு உண்மையான மறுவாழ்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்
நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.29,863 கோடி நிதி
சென்னைக்கான பிற முக்கிய உள்கட்டமைப்பு அறிவிப்புகள்
ரிங் மேன் குடிநீர் திட்டம்:
போக்குவரத்து அமைப்பு:
ஸ்மார்ட் பார்க்கிங் வசதி: