ஹாஸ்டலில் சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய வார்டன்.. இரவில் ஆடைகளை கழற்றச் சொல்லி கொடுமை!

  • சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னை ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திருவொற்றியூர் மற்றும் அமைந்தகரை பகுதிகளைச் சேர்ந்த 15 வயது கொண்ட சிறுவர்கள், 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ளனர்.

    அந்தக் காப்பக வார்டன் குமரேசன் மது போதையில் விடுதிக்கு வந்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவர்களை ஆடைகளைக் கழற்றி ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

    2 நாட்களுக்கு முன்பு, விடுதி வார்டன் குமரேசன் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களைப் எழுப்பி, இரும்புக் கம்பியால் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், சிறுவர்களின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி கழற்றச் சொல்லி, அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    திருவொற்றியூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அங்கு தங்கி படித்து வவரும் நிலையில், அவரைப் பார்க்க, அவரது தாயார் காப்பகத்துக்கு வந்துள்ளார். அப்போது அந்தச் சிறுவன் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். விசாரித்த போதும் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

    இதையடுத்து அடுத்த நாள் மாலை மீண்டும் காப்பகத்திற்கு சென்று சிறுவனிடம் அவரது தாயார் விசாரித்துள்ளார். அப்போது, காப்பக வார்டன் குமரேசன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த மாணவன் கூறியுள்ளார். மேலும் சில மாணவர்களும் தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, சிறுவனின் தாயார் வார்டன் குமரேசனை அழைத்து இதுபற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஆத்திரமடைந்து வார்டன் குமரேசனை கன்னத்தில் அறைந்துள்ளார். தகவல் அறிந்து, மற்ற சிறுவர்களின் பெற்றோர்களும் அங்கு வந்துள்ளனர்.

    அங்கு வார்டன் குமரேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமரேசனைக் கைது செய்தனர்.

    மேலும், காப்பகத்தில் தங்கியுள்ள மற்ற சிறுவர்களுக்கும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய போலீசாரும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட குமரேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    குழந்தைகள் தங்கிப் படிக்கும் அரசினர் காப்பகத்தில், வார்டனே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A case has been registered under the POCSO Act against a hostel warden at a government children's home in Royapuram, Chennai, for sexually harassing school students residing there.