நீ பீரியட்ஸ்ஸா, நாற்றம் அடிக்குது 11 வயது மாணவியை வெளியே நிற்க வைத்த சென்னை அரசு பள்ளி

  • சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 11 வயது மாணவியை மாதவிடாய் காரணமாக துர்நாற்றம் வீசுவதாக கூறி ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பள்ளி முடியும் நேரம் வரை அந்த மாணவியை வெளியே நிற்க வைத்ததால் மனம் வேதனை அடைந்த மாணவி, அழுதபடியே பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் ஆசிரியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    Advertisement

    12 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த ஆசிரியர், மாணவியை வெளியே நிற்க வைத்ததால் மாணவியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது: மாதவிடாய் காலத்தில் மாணவியை நிற்க வைத்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து சம்பந்தப்பட்டவரிடம் விசாரிக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எந்த ஆசிரியர்களும் அது அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ எந்த பள்ளியாக இருந்தாலும் மாதவிடாயை காரணம் காட்டி அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ள கூடாது. மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு இதமான சூழலை ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இதே போல் கோவை தனியார் பள்ளியில் மாதவிடாய் காரணமாக மாணவியை தேர்வறையின் வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. கோவை கிணத்துக்கடவு செங்குட்டைபாளையத்தில் உள்ள சுவாமி சித்பவானந்த மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பூப்பெய்தாராம். அந்த நேரத்தில்தான் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் அந்த மாணவி தேர்வு எழுத வந்தார். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியை (அவரும் பெண்தான்), மாணவியை தேர்வறைக்கு வெளியே அமர்ந்து தேர்வு எழுத வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதையடுத்து தேர்வு எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி, விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவி அடுத்த நாள் தேர்வு எழுத சென்ற போதும் அவரை வெளியே உட்கார வைத்திருந்தார். இதை அந்த மாணவியின் தாய் பார்த்துவிட்டு வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டார். இது குறித்து சார் ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த சம்பவத்தை தட்டி கேட்ட போது, "இந்த பள்ளியில் இப்படிதான் நடக்கும். வேண்டுமானால் உங்கள் மகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என பொறுப்பில்லாமல் பள்ளி முதல்வர் கூறிவிட்டாராம். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    English Summary

    Chennai School Incident (மாதவிடாய்- சென்னை பள்ளி மாணவியை வெளியே நிற்க வைத்த கொடூரம்) has triggered shock after an 11-year-old student was allegedly made to stand outside the classroom by a teacher over claims of menstrual-related odour at a government middle school in Gopalapuram.