அண்ணன் மேல பாசத்தை கொட்டுறங்க.. அப்பா-அம்மாவால் மாணவி விபரீத முடிவு! 13 மாடியில் இருந்து குதித்து..

  • சென்னை: மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஜிஎன்டி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிஜய்குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இவரது 14 வயது மகள் பாலக், சூரப்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தனது பெற்றோர் அண்ணனை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும், தன்னை ஏளனமாகப் பார்ப்பதாகவும் மாணவி மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்த நிலையில், இன்று மாணவி தனது உடற்பயிற்சி பயிற்சியாளரின் செல்போனுக்கு, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் வீட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

    கோவை பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. பெற்றோர் போராட்டத்தால் டிஜிபி ஆணை!

    இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல் நிலைய போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், மாணவியின் பெற்றோர் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல! தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    English Summary

    A 14-year-old Class 9 student died after falling from the 13th floor of an apartment in Madhavaram, Chennai. Police are investigating.