Chennai 2nd Airport: செய்யூர், மாநெல்லூருக்கு அனுமதி கிடைக்காது! விஜய்க்கு யார் ஐடியா கொடுப்பது?

  • சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னையின் 2ஆவது விமான நிலையம் அமைக்க செய்யூர், மாநெல்லூர் ஆகிய இரு இடங்களில்அனுமதி பெறுவதில் சவால்கள் நிறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக கடந்த காலங்களில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கலாம் என இடம் தேர்வு செய்யப்பட்டது.

    Advertisement

    ஆனால் இது விவசாய பூமி என்பதால் இந்த பகுதி மக்கள் 1000 நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இந்த நிலையில்தான் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என விஜய், சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    இதனால் எந்த இடம் சாத்தியம் என்பது குறித்து பலரும் பல்வேறு இடங்களை சமூகவலைதளங்களில் குறிப்பிட்டு வந்தனர். சிலர் வேலூராக இருக்கலாம் என்றனர்.

    இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் மாமல்லபுரத்தை அடுத்த செய்யூர், கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர் ஆகிய பகுதிகளில் விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு தெரிவித்துள்ளது.

    Advertisement

    புதுவையில் இருந்து செய்யூர் 40 கி.மீ. தூரத்திலும் கல்பாக்கத்தில் இருந்து 35 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. அது போல் செய்யூரில் இருந்து சென்னை விமான நிலையம் 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    அது போல் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூரை எடுத்துக் கொண்டால் அது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெறும் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து இந்த இடம் 191 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    எனினும் இந்த இரண்டு இடங்களும் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது செய்யூருக்கு தாம்பரம் விமான படை தளத்தின் வான்வெளி அனுமதி தேவைப்படுகிறது. அது போல் மாநெல்லூருக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் அனுமதி தேவைப்படும். இரண்டு இடங்களிலும் அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    செய்யூர் அருகே 20 கி.மீ. தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. தீபாவளி நேரங்களில் இந்த சரணாலயத்தை சுற்றியுள்ள மக்கள் காலம் காலமாக பட்டாசு வெடிப்பதையே தவிர்த்து வருகிறார்கள். அப்படியிருக்கும் போது விமான நிலையம் என்பது சரியாக இருக்காது. மேலும் இந்த வான்வெளி பரப்பானது தாம்பரம் விமான படை தளத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் செய்யூர் அமைந்திருக்கிறது.

    அது போல் கும்மிடிப்பூண்டி மாநெல்லூரிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் ஸ்ரீஹரிகோட்டா அமைந்துள்ளது. மேலும் பழவேற்காடு ஏரியும் இங்கு உள்ளது. பொதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதல் நடக்கும் போது பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படும். எனவே பாதுகாக்கப்பட்ட சூழலியல் மண்டலமான பழவேற்காடு ஏரி அருகே விமான நிலையம் என்பது சாத்தியமில்லை. அதிலும் அரசு பரிந்துரைத்த இரு இடங்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 100 முதல் 190 கி.மீ. தூரம் இருப்பதால் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும் செய்யூரில் நிறைய விவசாய இடங்களும் ஏரிகளும் காணப்படுகின்றன. பரந்தூரில் எப்படி விவசாய நிலத்தை அழித்துவிட்டும் கம்பன் கால்வாயை மறைத்துவிட்டும் விமான நிலையம் கட்டுவது ஆபத்தானதோ அது போன்றுதான் செய்யூரில் விமான நிலையம் என்ற பரிந்துரையும்!

    English Summary

    Chennai second Airport: challenges are roaming around cheyyur and Manellur as they are near to Tambaram air base and Sriharikotta.