சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக அமைச்சர்களின் அறைகள் இருளில் மூழ்கின. இந்நிலையில், மின்வெட்டுக்கான காரணம் குறித்து மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அக்டோபர் 12-ந் தேதி ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் அமைச்சர்கள் அறைகள் இருளில் மூழ்கிக் கிடந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.
மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமைச் செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று (12.10.2026) காலை மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில். ஒரு சுவிட்சின் பி-ஃபேஸ் (B-Plase) மின் விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர். இதனையடுத்து. காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.