சோழிங்கநல்லூர் பகுதியில் இன்று அதிரடி வேட்டை.. கல்லூரி மாணவர்கள் அறைகளில் போதைப்பொருட்கள் பறிமுதல்!

  • சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில் இன்று அதிகாலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். போதைப்பொருட்கள் தொடர்பாக நடந்த இந்த அதிரடி ரெய்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    சென்னையை ஒட்டிய கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சோழிங்கநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மாணவர் விடுதிகளில் அதிகளவில் தங்கி படித்து வருகின்றனர். இந்த இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

    Advertisement

    இதையடுத்து காவல் துணை ஆணையர் ரகுபதி தலைமையில், செம்மஞ்சேரி உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் அடங்கிய சிறப்பு குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகள் போலீஸாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.

    போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், போலீசார் 11 குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தினர். மாணவர்கள் தங்கியிருந்த வீடுகள், அறைகள் உள்ளிட்ட இடங்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருக்கின்றதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    இன்று அதிகாலை நேரத்தில் தொடங்கிய இந்த அதிரடி சோதனை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சோதனையின்போது சிறு சிறு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணப் பொருட்கள் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து செம்மஞ்சேரி உதவி ஆணையர், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு உள்ளதை தடுக்கும் நோக்கிலும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

    மேலும், மாணவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் போதைப் பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் அமைதியாக காணப்படும் சோழிங்கநல்லூர் குடியிருப்பு பகுதியில் ஒரே நேரத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிந்து சோதனை நடத்திய சம்பவம் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, மாணவர்கள் தங்கியுள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    More than a hundred police personnel conducted surprise raids starting early this morning at residential complexes in Chennai's Sholinganallur area, where college students reside. This sudden operation, targeting narcotics, caused a major stir in the locality.