சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி,பள்ளி மாணவர்களின் கல்வி, பொது நலனே முக்கியமானது என கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி 177 தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கட்சி நிதி என்ற பெயரில் ரூ 400 கோடி வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அரசகுமார், முன்னால் எம்எல்ஏ முத்துக்குமார், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சரவணன், ராஜா, சுரேஷ், தினேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கான அறையில் இருக்கிறார். அவருக்கு தினமும் வீட்டு சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் கடந்த 29 ஆம் தேதி சரணடைந்து சிறையில் உள்ளார். சரவணன், தினேஷ் ஆகியோர் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இந்த நிலையில் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஐரான வழக்கறிஞர்கள், அன்பில் பெயரை சொல்லி அரசக்குமார் ஊழல் செய்தால் அதற்கு அன்பில் எப்படி பொறுப்பாக முடியும்? ஜாமீன் கொடுத்தால் அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார், சாட்சிகளையும் கலைக்க மாட்டார் என வாதிடப்பட்டது. மேலும் லஞ்சம் வாங்குவது குற்றம் என்பதை போல் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற அடிப்படையில் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஏன் விசாரணைக்குள்படுத்தவில்லை என்ற கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைத்து, விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பார் என காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவு அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், "தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி அரசகுமாரும், முத்துக்குமாரும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பெரும் தொகையை வசூலித்து அதை கட்சி நிதி என்ற பெயரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த அன்பில் மகேஷிடம் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சிகளான தனியார் பள்ளி நிர்வாகத்தினர் வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது. அன்பில் மகேஷ, அவரது மனைவி ஜனனி, அமெரிக்காவில் உள்ள அவரது மாமியார் லதா கைலாசம் ஆகியோர் 2015- 2016 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளுக்கு வருமான வரி கணக்குகளைச் சமர்ப்பிக்க போலீஸார் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். அதில் ஆடிட்டர்கள் மாற்றத்தால் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கான கணக்கு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாகவும் எஞ்சிய கணக்குகளை விரைவில் தாக்கல் செய்வதாகவும் மனுதாரர் தரப்பு உறுதியளித்தது. லஞ்சம் கொடுக்காவிட்டால் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம் என அரசக்குமாரும், முத்துக்குமாரும் தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டியதாகவும் இதுவரை ரூ 17 கோடிக்கான பண பரிவர்த்தனைகள் டேட்டாவுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. அன்பில் மகேஷ் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மின்னணு மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. அமைச்சராக பதவி வகித்த அன்பில் மகேஷ், அரசக்குமாரின் குற்ற பின்னணி, அன்பில் கைதான 3 நாட்களில் முத்துக்குமார் திடீரென வந்து சரணடைந்தது இந்த வழக்கின் தீவிரத்தை காட்டுகிறது. இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. சமுதாயத்தில் அரசியல் பின்புலத்துடன் கூடிய செல்வாக்கு மிக்க நபரான அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கினால் அது புலன் விசாரணையை வெகுவாக பாதிக்கும். முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி அவரிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் அன்பில் மகேஷிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறை சொல்கிறது. இந்த வாதத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த அன்பில் மகேஷின் தனிப்பட்ட நலனைவிட பள்ளி மாணவர்களின் கல்வி, பொதுநலனே முக்கியமானது. எனவே தற்போது அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.அரசக்குமார் கைது
புழல் சிறை
ஜாமீன் கோரி வழக்கு
அன்பில் வாதம்
காவல் துறை வாதம்
வாக்குமூலம்
அன்பில் மகேஷுக்கு ஜாமீன் நிராகரிப்பு.. திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை விளக்கம்
தேர்வெழுத்த அனுமதிக்க மாட்டோம் என மிரட்டல்
புலன் விசாரணை
முத்துக்குமார் சரண்
சாட்டை துரைமுருகனுக்கு நிம்மதி.. விஜய் குறித்த அவதூறு வழக்கில் முன் ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
ஜாமீன் வழங்க முடியாது