ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?

  • சென்னை: தலைநகரின் பல உள்தெருக்களை இருள் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் நீண்ட நாட்களாக பாதுகாப்பு அச்சத்தில் இருந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஒரு முக்கியமான அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    Advertisement

    நாளை (திங்கட்கிழமை) மாலை முழு சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் வார்டு வாரியாக நேரடி கள ஆய்வு நடத்தி, பழுதான மற்றும் எரியாத தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் 100 சதவீத ஒளிப்பொலிவை உறுதி செய்ய மாநகராட்சி இலக்கு வைத்துள்ளது.

    Advertisement

    மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், சென்னையின் முக்கிய சாலைகள், உள்தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் மற்றும் மயானங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் (High Mast Lights) பராமரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், நடைமுறையில் பல இடங்களில் விளக்குகள் சரியாக இயங்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

    ஆணையரின் நேரடி உத்தரவின்படி, சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள அனைத்து வார்டுகளிலும் மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் நாளை மாலை நேரடியாகக் களத்துக்கு வந்து ஆய்வு செய்ய உள்ளனர். எரியாத விளக்குகள், உடைந்த பல்புகள், தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவற்றை உடனடியாகக் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தொடர் பராமரிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்படும்.

    Advertisement

    பொதுமக்களுக்கு வசதியாக, மாநகராட்சி 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா உதவி எண்ணான 1913-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை அல்லது பழுதாக உள்ளன என்றால் உடனடியாக இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்ட உடன் அவை கண்காணிக்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என மாநகராட்சி உறுதியளித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 3,11,285 தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிக விளக்குகள் கொண்ட மண்டலமாக அம்பத்தூர் மண்டலம் உள்ளது (30,268 விளக்குகள்). இருப்பினும், இவ்வளவு பெரிய கட்டமைப்பு இருந்தும் நகரின் பல உள்பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து குறைகளை முன்வைத்து வருகின்றனர்.

    Advertisement

    இருள் சூழ்ந்த தெருக்கள் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் சிறு சாலைகளில் விளக்கு வசதி இல்லாததால் பள்ளங்கள், கால்நடைகள் மற்றும் தெரு நாய்களால் விபத்துகள் அதிகரிக்கின்றன.

    பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர், "எங்கள் பகுதியில் பல சந்துகள் இரவில் முழு இருட்டில் உள்ளன. தனியாக வெளியே செல்ல பயமாக இருக்கிறது. சில இடங்களில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதும் உண்டு" என்று வருத்தம் தெரிவித்தார்.

    அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர், "கும்மிருட்டில் மாடுகள் சாலையில் உலா வருகின்றன. தெரு நாய்கள் வாகனங்களைத் துரத்துகின்றன. இருட்டில் வேகமாக ஓட்ட வேண்டிய நிலை ஏற்படுவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன" என்று தெரிவித்தார்.

    Advertisement

    மாநகராட்சியின் இந்த திடீர் ஆய்வு நடவடிக்கை சென்னை மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள் புகார்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆணையர் ஜி.எஸ்.சமீரனின் இந்த உத்தரவு, நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chennai Street Lights Overhaul: Massive Ward-Wise Inspection Tomorrow Evening – GCC Commissioner